143 பேரின் பெயர்களை பட்டியலிட்டு புகார் தெரிவித்த இளம்பெண்: நாட்டை உலுக்கிய சம்பவம்..!

940

இந்தியாவின் தெலங்கானா மாநிலத்தில், தன்னை பெண்கள் உள்பட 143 பேர் வன்கொடுமைக்கு இரையாக்கியதாக 25 வயது பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். குறித்தப் புகாரில் தனது கணவர் குடும்பத்தினர் உள்பட 143 பேரின் பெயர்களையும் பட்டியலிட்டு தெரிவித்துள்ளார்.

தெலங்கானா மாநிலம் சோமாஜிகுடாவைச் சேர்ந்த குறித்தப் பெண்ணுக்கு 2009 ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. ஆனால் திருமணமான மூன்றாவது மாதத்திலிருந்தே கணவரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அவரைத் துன்புறுத்தியும், தாக்கி வந்ததாகவும் கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து, 2010 ஆம் ஆண்டு விவாகரத்து கொடுக்கப்பட்டது. இந்த நிலையில், விவாகரத்து பெற்ற அந்தப் பெண், கணவரின் குடும்பத்தினர் சிலர் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக பஞ்சகுடா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்தப் புகாரில், சாதி என்ற பெயரில் தனது கணவரின் குடும்பத்தினர் தன்னை துஷ்பிரயோகம் செய்ததாகவும், பாலியல் வன்கொடுமை செய்து, அதனைப் படமாக்கியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.


மேலும், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட படங்கள் மற்றும் விடியோக்களை சமூக ஊடகங்களில் பரவ விட்டுவிடுவோம் எனவும், கொலை செய்துவிடுவோம் எனவும் அவர்கள் மிரட்டுவதாகவும் குறிப்பிட்டு, 143 பேரின் பெயர்களை பட்டியலிட்டு புகார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து காவல் அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், பாதிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ள பெண் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிந்துள்ளோம்,

சில பெண்கள் உள்பட 143 பேரின் மீது அளிக்கப்பட்ட புகாரை சரிபார்த்து வருகிறோம். விரிவான விசாரணையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட பெண் பரோசா மையத்திற்கு ஆலோசனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அவர் அளித்த புகாரில் அரசியல் பின்னணி கொண்டவர்களும், மாணவர் தலைவர்கள், ஊடகம், திரைத்துறை மற்றும் வேறு சில தறைகளில் பணியாற்றுபவர்களின் பெயர்களும் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.