திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் 10ம் வகுப்பு முடித்துவிட்டு ஷூ கம்பெனியில் வேலை செய்து வந்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்து வெளியே சென்ற சிறுமி வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் இதுகுறித்து வாணியம்பாடி கிராமிய காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை தேடி வந்த நிலையில் நேற்று வாணியம்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்று வைரலானது.
அதில், காணாமல் போன சிறுமிக்கு அதே பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் தாலி கட்டுவது போல் காட்சிகள் இருந்தது. அதனடிப்படையில் போலீசார் அப்பகுதிக்கு விரைந்து சென்று விசாரித்தனர்.
அதில் இளைஞர் சிறுமியை திருமணம் செய்தது உறுதியானது. இதற்கிடையில், சிறுமி மற்றும் இளைஞர் ஆகிய இருவரும் ஆம்பூர் பேருந்து நிலையத்தில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.
ஆனால் அதற்குள் அந்த வாலிபர் சிறுமியை அங்கேயே விட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து சிறுமியை மீட்ட போலீசார் அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர். தப்பி ஓடிய இளைஞர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.