சென்னை..

சென்னை திருவொற்றியூரில் 16 வயது சிறுமியை காதலித்து நாகர்கோவிலுக்கு அழைத்துச் சென்று பெற்றோர் முன்னிலையில் திருமணம் செய்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.

நாகர்கோவிலைச் சேர்ந்த 30 வயதுடைய இளைஞர் மதன்ராஜ். இவர் சென்னை திருவொற்றியூர் பகுதியில் உள்ள மளிகை கடையில் கடந்த 8 மாதங்களாக வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த 9ஆம் வகுப்பு பயின்று வரும் பள்ளி மாணவியான 16 வயது சிறுமி, தினமும் மள்ளிகை கடைக்கு பொருள் வாங்கும் போது மதன்ராஜிடம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே காதலாக மாறியது.

இந்த விவகாரம் சிறுமியின் வீட்டாருக்கு தெரிய வரவே சிறுமியை தந்தை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் இருவரும் பேசாமல் இருந்துள்ளனர். இந்நிலையில் திருமணம் செய்துகொள்வதாக கூறி,

சிறுமியை கடந்த 14ஆம் தேதி மதன் ராஜ் தனது சொந்த ஊரான நாகர் கோவிலுக்கு அழைத்து சென்று அவரது பெற்றோர்கள் முன்னிலையில் சிறுமியை திருமணம் செய்துள்ளார். சிறுமியை காணவில்லை என திருவொற்றியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்ததில் சிறுமி நாகர்கோவில் இருப்பது தெரிய வந்தது . பின்னர் சிறுமியை அங்கிருந்து மீட்டு மதன் ராஜை கைது செய்த போலீசார், அவரை சென்னை அழைத்து வந்து குழந்தை திருமண சட்டம் மற்றும் போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.















