நடிகர் சிரஞ்சீவி சர்ஜாவுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பே லேசான நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
கன்னட சினிமாவின் பிரபல நடிகரான சிரஞ்சீவி சர்ஜாவின் அகால மரணம் ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது, தனது நிறைமாத கர்ப்பிணி மனைவியான மேக்னா ராஜை தவிக்க விட்டு சென்றுவிட்டார் சிரஞ்சீவி சர்ஜா.
சிரஞ்சீவி சர்ஜா நடிகர் துருவ சர்ஜாவின் சகோதரரும், நடிகர் அர்ஜுன் சர்ஜாவின் மருமகனும் ஆவார். இவரது தாத்தாவான சக்தி பிரசாத்தும் பிரபல நடிகராக வலம் வந்தவர்.
சிரஞ்சீவி சர்ஜா, கடந்த 2009ம் ஆண்டு தமிழில் வெளியான சண்டக்கோழி படத்தின் ரீமேக் படமான ‘வாயுபுத்ரா’ என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.
சுமார் 10 ஆண்டுகாலமாக திரையுலகில் வலம்வந்த அவர் சம்ஹாரா, ஆத்யா, காக்கி, சின்கா, அம்மா ஐ லவ் யூ, பிரேமா பராஹா, தண்டம் தசகுனம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் திடீரென கடுமையான நெஞ்சுவலி மற்றும் மூச்சு திணறலால் பாதிக்கப்பட்டார்.
இதனை தொடர்ந்து பெங்களூரு ஜெயாநகரில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லாப்பட்டார் சிரஞ்சீவி சர்ஜா.
ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
அவருக்கு கடுமையான கார்டியாக் அரெஸ்ட் மற்றும் பிரைன் ஸ்ட்ரோக் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இரண்டு நாட்களுக்கு முன்பே சிரஞ்சீவி சர்ஜாவுக்கு லேசான நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. ஆனால் அதனை பெரிதாக எடுத்துக்கொள்ளாத சிரஞ்சீவி சர்ஜா முதலுதவி சிகிச்சையுடன் நிறுத்திக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.
இதனைக் கேட்ட ரசிகர்கள் ஒரு வேளை லேசான நெஞ்சுவலி ஏற்பட்ட போதே அதனை நடிகர் சிரஞ்சீவி சர்ஜா சீரியஸாக எடுத்திருந்தால் இன்று அவரது உயிர் போயிருக்காது என உருக்கமாக தெரிவித்து வருகின்றனர்.
சிரஞ்சீவி சர்ஜாவின் உடல் கனகாபுரத்தில் உள்ள அவரது தம்பியின் பண்ணை வீட்டில் உள்ள தோட்டத்தில் நேற்று அடக்கம் செய்யப்பட்டது.
உயிரிழந்த சிரஞ்சீவி சர்ஜா தற்போது 3 படங்களில் நடித்து வந்தார். லாக்டவுன் காரணமாக அந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.