+2 தேர்வில் தோல்வி… மாணவி தூக்கிட்டு தற்கொலை!!

66

கடலூர் அருகே 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடைந்ததால், மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் இன்று காலை 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி அபிநயா, பொதுத்தேர்வில் தோல்வியடைந்ததால் தற்கொலை செய்து கொண்டுள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அடுத்துள்ள கோட்டேரி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகள் அபிநயா. முத்தாண்டிகுப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்த அபிநயா, அனைத்து பாடங்களிலும் தேர்வு பெற்றிருந்த நிலையில்,

கணக்குப் பாடத்தில் மட்டும் 26 மதிப்பெண்கள் மட்டும் பெற்று தோல்வியடைந்தார். எனினும் தமிழில் 85, கணினி அறிவியலில் 82 மதிப்பெண்கள் என மொத்தம் 360 மதிப்பெண்களை பெற்றிருந்தார்.

இன்று தேர்வு முடிவுகள் வெளியான சமயத்தில் வீட்டில் யாரும் இல்லாத நிலையில், தனியாக இருந்த அபிநயா, துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.


இது குறித்து தகவல் அறிந்த விருத்தாச்சலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து மாணவியின் உயிரிழப்பு குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்கொலை எந்த பிரச்சினைக்கும் தீர்வு அல்ல. தற்கொலை எண்ணங்களில் இருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற நல்வாழ்வுத்துறை ஹெல்ப்லைன் 104 மற்றும் சினேகா தற்கொலை தடுப்பு ஹெல்ப்லைன் 044-24640050 என்ற எண்களை தொடர்பு கொள்ளவும்.