சென்னை..

சென்னை மாங்காட்டில் இரண்டரை வயது குழந்தை விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கள்ளக்காதலனும் தாயும் சேர்ந்து அடித்ததில் இரண்டரை வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது.

சென்னை அமைந்தகரையை சேர்ந்தவர் செல்வ பிரகாசம். இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு லாவண்யா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டரை வயதில் சர்வேஸ்வரன் என்ற மகன் உள்ளான்.

இதனால் கோபித்துக் கொண்ட லாவண்யா குழந்தையை தாய் வீட்டிற்கு அழைத்துக் கொண்டு சென்றதாக கூறப்படுகிறது. செல்வ பிரகாசம் தனியாக வசித்து வந்துள்ளார். தனது குழந்தையை பார்ப்பதற்காக லாவண்யாவின் பெற்றோர் வீட்டிற்கு செல்வ பிரகாசம் சென்று பார்த்துள்ளார். ஆனால் அங்கும் லாவண்யா செல்லவில்லை என்று கூறப்படுகிறது.

லாவண்யா குழந்தையுடன் விருகம்பாக்கத்தில் வசிப்பதாக கிடைத்த தகவலையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பாக செல்வ பிரகாசம் சென்று பார்த்துள்ளார். அப்போது இரண்டரை வயது மகன் இறந்து விட்டதாக தகவல் கிடைத்துள்ளது. இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த செல்வ பிரகாசம் இதுதொடர்பாக மாங்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அதில், இரண்டரை வயது மகன் இறந்துவிட்டதாகவும் தந்தையான எனக்கு தெரிவிக்காமலே மகனின் உடலை அடக்கம் செய்து விட்டார்கள் என்றும் புகாரில் கூறியிருந்தார்.
இது குறித்து மாங்காடு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்ட போது, இரண்டரை வயது குழந்தை சர்வேஸ்வரனுக்கு தலையில் அடிபட்டு இறந்து விட்டதாகவும் கணவன் எனக்கூறி தனது கள்ளக்காதலன் மணிகண்டன் என்பவரை அழைத்து சென்று குழந்தையின் உடலை அடக்கம் செய்ததும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் குழந்தையின் உடலை மீண்டும் பிரதேச பரிசோதனை செய்தனர். பிரதே பரிசோதனை அறிக்கையில் குழந்தையின் தலையில் பலமாக தாக்கியதால் இறந்து போனதாக அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.

இதையடுத்து மணிகண்டனையும் லாவண்யாவையும் அழைத்த போலீசார் தங்கள் பாணியில் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதாவது, கணவரை பிரிந்து வந்த லாவண்யாவுக்கும் மணிகண்டன் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் நெருக்கமாக இவர்கள் இருவரும் பழகியுள்ளனர்.
ஒரு கட்டத்தில் இருவருக்கும் இடையே தகாத உறவு ஏற்பட்டுள்ளது. இவர்கள் நெருக்கமாக இருந்த போது குழந்தை சர்வேஸ்வரன் இடையூறாக இருந்ததாக கூறி கள்ளக்காதலன் மணிகண்டன் குழந்தையை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார்.

பைக்கில் மணிகண்டன் இருந்த போது பைக்கில் ஏற வந்த குழந்தையை வேகமாக தள்ளி விட்டதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயம் அடைந்த குழந்தை சர்வேஸ்வரனை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

எனினும் சிகிச்சை பலனளிக்காமல் குழந்தை உயிரிழந்துள்ளது. தகாத உறவுக்கு இடையூறாக இருந்ததால் குழந்தையை தாயின் கள்ளக்காதலன் அடித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக தாய் லாவண்யா மற்றும் கள்ளக்காதலன் மணிகண்டன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.















