27 வயசு இளம் செவிலியர் பரிதாபமாக உயிரிழந்த சோகம்.. நடந்தது என்ன?

244

திண்டுக்கல்லில்..

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் எரியோடு பாலசுப்பிரமணியன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் முருகன். இவருடைய மகள் பிரீத்தி (27). இவர் பிஎஸ்சி படித்து முடித்து விட்டு நாமக்கல் மாவட்டம் கந்தம்பாளையம் அருகே நல்லூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பகுதிநேர செவிலியராக பணியாற்றி வந்தார்.

பணிக்காக அவர் சுகாதார நிலையம் அருகே உள்ள வீட்டில் மாடி அறையை வாடகைக்கு எடுத்து தனியாக தங்கியிருந்தார். சமீபகாலமாக பிரீத்தி ரத்த அழுத்தம் காரணமாக அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. மேலும் மருத்துவமனையிலும் சிகிச்சையும் பெற்று வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று அதிகாலை பால் வாங்குவதற்காக மாடிப்படிக்கட்டில் இருந்து இறங்கி வரும்போது மயக்கம் ஏற்பட்டதால் தவறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.


இதையடுத்து அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது வரும் வழியிலேயே பிரீத்தி இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து மருத்துவமனைக்கு வந்த நல்லூர் காவல்துறையினர், பிரீத்தி உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் அவருடைய பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் திருச்செங்கோட்டுக்கு வந்து மகளின் உடலைப் பார்த்து கதறி அழுதனர். பின்னர் செவிலியர் இறந்தது தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.