288 இடங்களில் செக் போஸ்ட்..! டிரோன் கேமரா! சாலைகள் மூடல்! முடக்கப்பட்டது சென்னை!

682

சென்னையில் முழு ஊரடங்கு தொடங்கியுள்ள நிலையில் ஒரு கோட்டை போல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன, 288 இடங்களில் சோதனை சாவடிகள் அமைத்து போலீசார் வாகனங்களை திருப்பி அனுப்பி வருகின்றனர்.

கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் 4 கட்ட ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. 5-ம் கட்ட ஊரடங்கு ஜூன் 1-ம் தேதி முதல் நடைமுறையில் உள்ளது. சென்னை பெருநகர பொதுமக்களாகிய நீங்கள் அனைவரும் இதுவரை நல்ல ஒத்துழைப்பு அளித்துள்ளீர்கள். உங்கள் அனைவருக்கும் நன்றி.நோய்பரவலை கருத்தில்கொண்டு இந்த 5-ம் கட்ட ஊரடங்கில், நாளை (19.06.2020) முதல் ஜூன் 30-ம் தேதி வரை சிறு தளர்வுடன் கூடிய முழு ஊரடங்காக சென்னை மற்றும் அருகில் உள்ள மாவட்டங்களில் கடைபிடிக்கப்படவுள்ளது.

மேலும், ஞாயிற்றுக் கிழமைகளான 21.06.2020 மற்றும் 28.06.2020-ம் தேதிகளில் முழு ஊரடங்காக கடைபிடிக்கப்படவுள்ளது. இதற்கும் பொதுமக்கள் நல்ல ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.இந்த முழு ஊரடங்கு காலத்தில் கீழ்கண்ட கட்டுப்பாடுகளை அரசு அறிவித்துள்ளது.

1. மருத்துவத் தேவை தவிர பிற தேவைக்காக வாடகை ஆட்டோ, டாக்ஸி மற்றும் தனியார் வாகன உபயோகம் அனுமதிக்கப்படாது.


2. காய்கறி, மளிகைக் கடைகள், நடமாடும் கடைகள் மற்றும் பெட்ரோல் பங்குகள் காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே செயல்படும்.

3. உணவகங்கள் காலை 6 மணி முதல் 8 மணி வரை பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதிக்கப்படும். தேநீர் கடைகள் இயங்க அனுமதி கிடையாது.

இந்த முழு ஊரடங்கு காலத்தில் பொதுமக்களாகிய நீங்கள்

1. அத்தியாவசியப் பொருட்களை வாங்க வாகனங்களைப் பயன்படுத்தாமல் நடந்து செல்லுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். மேலும், நீங்கள் வசிக்கும் இடத்திற்கு அருகிலேயே, 2 கி.மீ சுற்றளவு தொலைவிற்குள் மட்டும் சென்று பொருட்களை வாங்க வேண்டும்.

2. மருத்துவத் தேவை, ரயில் மற்றும் விமான பயணம் தவிர பிற தேவைக்காக ஆட்டோ, டாக்ஸி மற்றும் தனியார் வாகனங்களில் செல்ல அனுமதி இல்லை.(பயணச் சீட்டு வைத்திருக்க வேண்டும்)

3. அரசு அனுமதித்துள்ளபடி மத்திய, மாநில அரசு நிறுவனங்களில் 33% பணியாளர்கள் வேலைக்குச் செல்லும் போது அதற்கான அனுமதிச் சீட்டினை கண்டிப்பாக காட்ட வேண்டும். அதை A5 Size-ல் பிரின்ட் எடுத்து தொங்கவிட்டிருக்க வேண்டும்.

4. சென்னைக்கு வெளியே பணிசெய்யும் பணியாளர்கள் தினசரி பணிக்காக சென்னை பெருநகராட்சி எல்லைக்கு வெளியே செல்ல அனுமதி இல்லை.

5. தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் காவலாளிகள் (Security Guard) சீருடையில் இருந்தால் மட்டுமே பயணம் செய்ய அனுமதிக்கப்படுவர்.

6. அத்தியாவசியமின்றி வீடுகளை விட்டு வெளியே நடமாடுபவர்களை ட்ரோன் காமிராக்கள் (Drone Camera) மூலம் கண்காணிக்க உள்ளோம்.

7. முழு ஊரடங்கினை முழுமையாக அமல்படுத்த, சென்னை பெருநகரில் 288 இடங்களில் சோதனைச்சாவடி (Check Post) அமைக்கப்பட உள்ளது. அந்த இடங்களில் கூடுதல் காவலர்கள் நியமிக்கப்பட்டு வாகன சோதனை நடைபெறவுள்ளது. இதற்கு பொதுமக்கள் நல்ல ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

8. பெருநகராட்சி எல்லையில் உள்ள சோதனை சாவடிகளில் சோதனையை தீவிரப்படுத்தி போக்குவரத்து கட்டுப்படுத்தப்பட உள்ளது. E-Pass பெறாமல் செல்வோர் மீது வழக்கு பதிவு செய்யப்படும்.

9. அனைத்து காவல் நிலைய பகுதிகளிலும் வாகனச் சோதனையை தீவிரப்படுத்தி தேவையில்லாமல் சுற்றி வருவர்கள் மீது வழக்கு பதிவு செய்து வாகனங்களை கைப்பற்றி அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

10. கடந்த 23.04.2020-ம் தேதி செய்ததைப்போல் அண்ணாசாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளை மூடி சாலைகளில் போக்குவரத்தினை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

11. முககவசம் அணியாமல் பயணிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஒவ்வொரு காவல் நிலையத்திலும் வருவாய் மற்றும் பெருநகராட்சியினருடன் இணைந்து இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

12. ஏற்கனவே பெறப்பட்ட பழைய அனுமதி சீட்டுகள் செல்லுபடியாகாது. புதிய அனுமதி சீட்டுகளை tnepass.tnega.org என்ற இணையதளம் மூலம் பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம்.

• காய்கறி மற்றும் மளிகைக் கடை உரிமையாளர்கள் கீழ்கண்ட நடைமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.

1. கடை உரிமையாளர்கள் அரசு அறிவித்துள்ள நேரக் கட்டுப்பாடுகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.

2. கடைக்குள்ளும், அதைச் சுற்றியும் கிரிமி நாசினி தெளிக்க வேண்டும்.

3. உரிமையாளர்களும், விற்பனையாளர்களும் முகக்கவசம் மற்றும் கையுறை அணிந்திருக்க வேண்டும்.

4. பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வண்ணம் வரிசை அமைத்தல், வட்டம் வரைதல் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

5. பொதுமக்களுக்கு சானிடைசர் அல்லது கைகழுவுவதற்கு சோப், தண்ணீர் வைத்திருக்க வேண்டும்.

6. கண்டிப்பாக குளிர்சாதன இயந்திரங்களை இயக்கக்கூடாது.

• கோவிட்-19 பொதுமுடக்கம் சம்பந்தமான அனைத்து தகவல்களும் https://alerts.chennaipolicecitizenservices.com/home/ என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம். இந்த முயற்சி அனூர் கிளவுட் தொழில்நுட்பம் மூலம் மேற்கொள்ளப்பட்டது. சாதாரணமாக அழுத்தினால் மட்டும் போதும், ஆங்கிலத்திலும், தமிலும் விபரங்களை தெரிந்து கொள்ளலாம்.

மேலும் பதிவிறக்கம் செய்ய தேவையில்லை. பொதுமுடக்கத்தின்போது செய்ய வேண்டியது மற்றும் செய்யக்கூடாதவை பற்றி DIGICOP செயலியிலும் தெரிந்து கொள்ளலாம்.