தமிழகத்தில்……….

தமிழகத்தில் பாலியல் பெண் தொழிலாளி ஒருவர், இளைஞருடன் தனிமையில் இருந்த பின் அவரை கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம், தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் மணடிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவருக்கு பழனிச்சாமி என்ற 30 வயதில் மகன் உள்ளார். பழனிச்சாமி, மாமந்தூர் பகுதியில் உள்ள ஒரு பேக்கரியில் வேலை செய்து வந்தார்.

இந்நிலையில், கடந்த 28-ஆம் திகதி தியாகதுருகம் அருகிலுள்ள பிரிதிவிமங்கலம் கிராம ஏரிக்கரை பகுதியில் பழனிச்சாமி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்த தகவல் பொலிசாருக்கு தெரிவிக்க, பொலிசார் விரைந்து வந்து உடலைக் கைப்பற்றி பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
பிரேதபரிசோதனையில், இறந்துபோன பழனிச்சாமி கழுத்து நெறிக்கப்பட்டு உயிரிழந்துள்ளது தெரியவந்ததால், பொலிசார் இதை கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

அப்போது, தியாகதுருகம் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் இறந்து போன பழனிச்சாமி, சம்பவ தினத்தன்று பிரியாணி பொட்டலம் வாங்கி சென்றது அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.
அப்போது அவருடன் ஒரு பெண்ணும் சென்றுள்ளார் என்பது உறுதியானதால், பொலிசார் அந்த பெண் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டனர். அதில் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள இலுப்பையூர் கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை என்பவரது மனைவி கோமதி(37) என்பது தெரியவந்தது.

இதையடுத்து பொலிசார் அவரை தேடிய போது, தலைமறைவாக இருப்பதை அறிந்தனர். அதன் பின் பொலிசாரின் தீவிர தேடலுக்கு பின், அவர் பொலிசாரிடம் சிக்கினார்.
கோமதி பொலிசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், இறந்துபோன பழனிச்சாமிக்கும் எனக்கும் நீண்ட நாட்களாகவே பழக்கம் இருந்து வந்தது. சம்பவத்தன்று இருவரும் இரவு நேரத்தில் கள்ளக்குறிச்சியில் இருந்து தியாகதுருகம் வந்தோம். அப்போது பழனிச்சாமி மது போதையில் இருந்தார்.

தியாகதுருகம் பகுதியில் இருந்த ஒரு ஹோட்டலில் பிரியாணி வாங்கி கொண்டு பிரிதிவிமங்கலம் ஏரிப் பகுதிக்கு சென்றோம். அங்கு பிரியாணியை சாப்பிட்டுவிட்டு இருவரும் தனிமையில் இருந்தோம். பின்னர் பழனிச்சாமி குடிபோதையில் என்னை எட்டி உதைத்தார். இதனால் எங்களுக்குள் சண்டை வந்தது.
இதில் ஆத்திரமடைந்த நான் பழனிச்சாமியின் கழுத்தை துணியால் இறுக்கினேன். அவர் இறந்து போனதை தெரிந்து கொண்டு அவரிடமிருந்த 3500 ரூபாய் பணம் செல்போன் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு தலைமறைவாகி விட்டேன் என்று வாக்குமூலம் அளித்துள்ளார். ஆனால், கோமதியைப் பற்றி விசாரணையில் மேலும் சில தகவல்கள் கிடைத்துள்ளது.

கோமதி எப்படி பழனிச்சாமியுடன் பழக்கம் இருக்கிறதோ, அதே போன்று விழுப்புரம், கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, கடலூர், விருத்தாசலம் ஆகிய பகுதிகளுக்குச் சென்று இதேபோன்று பல்வேறு ஆண்களுடன் பணத்திற்காக தனிமையில் இருப்பதும், அதன் பின் அவர்களை தாக்கி பணம், நகை, செல்போன் ஆகியவற்றை பறித்துச் செல்வதும் போன்ற செயலில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இவர் மீது இதுபோன்ற வழக்குகள் பல காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளது தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்டுள்ள கோமதி மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். பரிசோதனை முடிந்த பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.















