4 நாட்களில் திருமணம்… அழைப்பிதழ் கொடுக்க சென்ற புதுமாப்பிள்ளைக்கு நேர்ந்த பரிதாபம்!!

154

தமிழக மாவட்டம் கள்ளக்குறிச்சியில் திருமண அழைப்பிதழ் கொடுக்க சென்ற இளைஞர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் தச்சூரைச் சேர்ந்தவர் சிவகுமார் (27). இவர் கொத்தனாராக வேலை பார்த்து வந்தார்.

கச்சிராயப்பாளையம் பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவருக்கும் சிவகுமாருக்கும் திருமணம் முடிவானது. இவர்களின் திருமணம் வருகிற 12ஆம் திகதி நடைபெற உள்ளதாக நிச்சயிக்கப்பட்டது.

திருமணத்திற்கு 4 நாட்களே உள்ள நிலையில், சிவக்குமார் நேற்று முன்தினம் தனது உறவினர் வீட்டிற்கு திருமண அழைப்பிதழ் கொடுக்க இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

உலகங்காத்தான் எனும் கிராமத்திற்கு பயணித்த இவர், சேலம் மெயின் ரோட்டில் செல்லும்போது எதிரே வந்த வாகனத்தின் மீது மோதாமல் இருக்க பிரேக் பிடித்ததாக கூறப்படுகிறது.

திடீரென பிரேக் பிடித்ததால் நிலைதடுமாறி கீழே விழுந்த சிவக்குமாருக்கு தலையில் பலத்த அடி பட்டது. இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் உதவியுடன் சிவக்குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.


திருமணத்திற்கு 4 நாட்களே உள்ள நிலையில் மணமகன் விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.