தமிழகத்தில் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியில் வசித்து வருபவர் 40 வயது நாகசுரேஷ் .இவரது மனைவி 35 வயது விஜயலட்சுமி . இவர்களது மகள் 5 வயது முத்தீஸ்வரி.
இதில் நாகசுரேஷ் திருப்பூரில் தொழில் செய்துவருகிறார். ஓராண்டாக அணைக்காடு பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். கடந்த 4 நாட்களாக நாகசுரேஷின் வீடு உள்பக்கமாக தாளிட்டு இருந்தது.
வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து சந்தேகத்தின் பேரில் அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது, நாகசுரேஷ், அவரது மனைவி விஜயலட்சுமி, இவர்களது மகள் முத்தீஸ்வரி ஆகிய மூவரும் சடலமாக அழுகிய நிலையில் கிடந்தனர்.
மூவரின் உடல்களும் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு போலீஸார் அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து நடத்தப்பட்ட விசாரணையில், “தனது உறவினர் சூர்யமூர்த்தி மூலம் ரூ.5 லட்சம் கொடுத்து இந்த வீட்டை போக்கியத்துக்கு நாகசுரேஷ் பிடித்துள்ளார்.
சூரியமூர்த்திக்கு தனியாக ரூ. 5 லட்சம் கடனும் கொடுத்துள்ளார் நாகசுரேஷ். இந்நிலையில், கடந்த வாரம் சூரியமூர்த்தி தற்கொலை செய்து கொண்டார்.
சூரியமூர்த்தி மனைவியிடம் தான் கடனாக கொடுத்த பணத்தை நாகசுரேஷ் கேட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சூரியமூர்த்தி உயிரிழந்து விட்டதால் கொடுத்த பணத்திற்கும் தனக்கும் சம்பந்தமில்லை என சூரியமூர்த்தியின் மனைவி தெரிவித்துள்ளார்.
வீடு போக்கியத்துக்கு கொடுத்ததற்கு சூர்யமூர்த்திதான் சாட்சி, தற்போது கடனாக கொடுத்த பணமும் கிடைக்கவில்லை என்ற மனஉளைச்சலில் நாகசுரேஷ் இருந்துள்ளார்.
மனஉளைச்சலால் நாகசுரேஷ் தற்கொலை செய்துள்ளார். அவர் எழுதி வைத்துள்ள கடிதத்தில், “நாங்கள் அணிந்துள்ள நகையை விற்று எங்களது இறுதிச்சடங்கை செய்து விடுங்கள்” என உருக்கமாக எழுதி வைத்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.