மூதாட்டி கற்பழித்து…….

தமிழ் நாடு சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள அரியாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் அய்யனார். இவருடைய மனைவி லட்சுமி (வயது 60). லட்சுமி கடந்த 10 வருடங்களாக தனது கணவரை பிரிந்து மல்லூர் அருகே உள்ள ஆறங்கால் திட்டு என்ற இடத்தில் ஒரு சிறிய வீட்டில் வசித்து வந்தார்.
இந்த வீடு காட்டுப் பகுதியில் நெடுஞ்சாலை ஓரமாக தனியாக அமைந்துள்ளது. இந்த பகுதியில் கல்குவாரி உள்ளதால் லட்சுமி, இங்கு தினமும் கூலி வேலைக்கு சென்று வந்தார்.

பின்னர் நாளடைவில் கூலிவேலைக்கு யாரையும் அனுமதிக்கவில்லை. இதனால் லட்சுமி ஆடு, மாடுகள் வளர்க்கும் தொழிலில் ஈடுபட்டு வந்தார்.
வழக்கம்போல் நேற்று மாலை லட்சுமி, பட்டியில் அடைத்திருந்த ஆடு, மாடுகளை அவிழ்த்துக் கொண்டு அருகே உள்ள மலைகரடு பகுதிக்கு மேய்ச்சலுக்காக அழைத்துச் சென்றார்.

இரவு ஆனதும் ஆடுகள், மாடுகள் ஒவ்வொன்றாக வீடு திரும்பின. ஆனால் லட்சுமி மட்டும் வீட்டுக்கு வரவில்லை.
வெகு நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால் உறவினர்கள், பக்கத்தில் உள்ள மலைகரடு பகுதிக்கு சென்று தேடினர். ஆனால் அங்கு அவரை காணவில்லை. இதையடுத்து வீட்டின் அருகே உள்ள புதர்களில் தேடினர். அங்கு லட்சுமி ஆடைகள் களைந்த நிலையில் அரை நிர்வாண கோலத்தில் பிணமாக கிடந்தார்.

இது குறித்து உறவினர்கள் மல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று லட்சுமி உடலை பார்வையிட்டனர். அவரை மர்மநபர்கள் கற்பழித்து விட்டு,
கழுத்தை நெரித்து கொன்று இருப்பதும், பின்னர் லட்சுமி அணிந்திருந்த தோடு உள்ளிட்ட நகைகளை திருடி சென்று உள்ளனர் என்பதும் தெரியவந்தது. போலீசார், லட்சுமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கொலையுண்ட லட்சுமிக்கு அரசு இலவசமாக வீடு கட்டி கொடுத்துள்ளது. இந்த வீட்டில் குடியிருந்து வந்த லட்சுமி, குவாரிக்கு வேலைக்கு சென்று வந்தார். மேலும் அவர், ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு கரடு பகுதிக்கு அழைத்துச் செல்வார்.
இதை மர்மநபர்கள் நோட்டமிட்டு உள்ளனர். இதையடுத்து நேற்று இரவு அவரை தீர்த்துக்கட்டி உள்ளனர். கல் குவாரிக்கு வரும் லாரி டிரைவர்கள், நெடுஞ்சாலையில் செல்லும் டிரைவர்கள் யாரும் இந்த கொலையை செய்திருக்க வாய்ப்பில்லை.

லட்சுமிக்கு தெரிந்தவர்கள் அவரை கொலை செய்திருக்கலாம். அக்கம், பக்கத்தில் உள்ள வீடுகளில் வசிப்பவர்களிடம் இதுபற்றி விசாரித்து வருகிறோம், கூடிய விரைவில் கொலையாளிகளை கைது செய்து விடுவோம் என தெரிவித்துள்ளனர்.















