62 முறை டயாலிசிஸ் செய்தும் உயிருக்கு போராடிய இளைஞனை அரசு மருத்துவர்கள் காப்பாற்றிய நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் காட்டுபாவா பள்ளிவாசல் பகுதியைச் சேர்ந்தவர் ஆரோக்கியசாமி. இவருடைய மகன் மகேஷ் வில்லியம்ஸ்(வயது 18).
கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் போகவே தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள் டயாலிசிஸ் செய்ய வேண்டும் என கூறியுள்ளனர், ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த ஆரோக்கியசாமி கடனாக பெற்று 5 லட்ச ரூபாய் வரை செலவழித்துள்ளார்.
சுமார் 62 முறை டயாலிசிஸ் செய்த நிலையில், மகேசுக்கு கொரோனா இருப்பது உறுதியானது.
எனவே தங்களால் இனி டயாலிசிஸ் செய்ய இயலாது என தனியார் மருத்துவமனை நிர்வாகம் கூறியதுடன் அரசு மருத்துவமனைக்கு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
இதனையடுத்து புதுக்கோட்டை ராணியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மகேஷ்க்கு அங்கு பிரேத்யமாக டயாலிஸிஸ் கருவி வரவழைக்கப்பட்டு 10 நாட்கள் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதில் குணமடைந்த மகேஷ் தற்போது வீடு திரும்பிய நிலையில், மிக உருக்கமாக தன் உயிரை காப்பாற்றிய மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.