கர்நாடகாவில்..

கர்நாடகா மாநிலம் பனசங்கரி என்ற பகுதியைச் சேர்ந்தவர் மகேஷ் நயாக். 35 வயதான மகேஷ் வெறும் 5ஆம் வகுப்பு வரை தான் படித்தவர். ஆனால், கடந்த 10 ஆண்டுகாலமாக பலே மோசடி மன்னனாக வலம் வந்துள்ளார்.

இவர் 2014ஆம் ஆண்டு தொடங்கி மெட்ரிமோனி தளங்கள் வாயிலாக பெண்களை குறிவைத்து திருமணம் செய்து வந்துள்ளார். 5ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்த இவர் தன்னை டாக்டர், இன்ஜினியர், சிவில் கான்ட்ராக்டர் என்று ஒவ்வொரு பெண்களிடமும் வேறு வேறு பொய்களை சொல்லி தனது வலையில் வீழ்த்தியுள்ளார்.

இவ்வாறு இவர் கடந்த 9 ஆண்டுகளில் 15 பெண்களை மோசடி செய்து திருமணம் செய்துள்ளார். இந்த திருமணம் மூலம் இவருக்கு 4 குழந்தைகள் வேறு பிறந்துள்ளது. ஒரு கட்டத்தில் இவர் தன்னை டாக்டர் என்று நிரூபிக்க துமாகூரு பகுதியில் போலி கிளினிக் ஒன்றை சில காலம் வைத்து நடத்தி வந்துள்ளார்.

இந்தாண்டு தொடக்கத்தில் மைசூரில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றி வரும் பெண் ஒருவரை திருமணம் செய்துள்ளார். அந்த பெண்ணிடம் இவர் பணம் மற்றும் நகை கேட்டு தொல்லை செய்துள்ளார்.
பெண் தர மறுக்கவே கிடைத்த நகை, பணத்தை திருடிவிட்டு தலைமறைவானார். இதைத் தொடர்ந்து அந்த பெண் கொடுத்த புகாரின் பேரில் தான் போலீசார் தனிப்படை அமைத்து மகேஷை கைது செய்துள்ளனர்.

இவரால் பாதிக்கப்பட்ட மேலும் சில பெண்களும் முன்வந்து புகார் கொடுத்துள்ளனர். இருப்பினும் இவர் திருமணம் செய்த பல பெண்கள் படித்து நல்ல அந்தஸ்தில் இருப்பவர்கள் என்பதால் அவமானத்திற்கு பயந்து புகார் கொடுக்க முன்வரவில்லை என தெரிவிக்கப்பட்டது.















