புதுக்கோட்டையில்..

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் ஒடுகம்பட்டி அருகே மேட்டுப்பட்டியில் உள்ள பிடாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு இரவில் ஆடல் பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

அப்போது ஒடுகம்பட்டியை சேர்ந்த இளைஞர்களுக்கும், பள்ளத்துப்பட்டியை சேர்ந்த இளைஞர்களுக்கும் தகராறு ஏற்பட்டது. பள்ளத்துப்பட்டியை சேர்ந்த சிலர், கற்களை வீசி தாக்கியதில் ஒடுகம்பட்டியை சேர்ந்த முகமது யாஷின் (21) என்பவர் காயமடைந்தார்.

அவரை அப்பகுதியை சேர்ந்தவர்கள் மீட்டு கீரனூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பார்க்க மருத்துவமனை சென்ற ஒடுகம்பட்டியை சேர்ந்த தனியார் வங்கி உதவி மேலாளர் விக்னேஸ்வரன் (27) , கல்லால் தாக்கிய நபர்களிடம் உங்களை சும்மா விடமாட்டேன் என எச்சரித்ததாக கூறப்படுகிறது.

பின்னர் விக்னேஸ்வரன், வீரமணி (25), அரியராஜ் (23) ஆகியோருடன் ஒரே பைக்கில் கீரனூர் சென்றார். சேமத்துப்பட்டி பிரிவு சாலை அருகே சென்றபோது பைக்கை பள்ளத்துப்பட்டியை சேர்ந்த 8 பேர் கொண்ட கும்பல் வழிமறித்தது.

அப்போது கோவில் திருவிழாவில் ஏற்பட்ட தகராறு காரணமாக அந்த கும்பல் விக்னேஸ்வரனை தாக்கியது. அப்போது விக்னேஸ்வரனை கம்பியால் குத்தியதால் அவர் ரத்தவெள்ளத்தில் கீழே சரிந்தார். பின்னர் அவருடன் வந்த 2 பேரையும் சரமாரி தாக்கியது.

ரத்த வெள்ளத்தில் துடித்த விக்னேஸ்வரனை, கம்பியால் குத்தியவர்களே மீட்டு கீரனூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், விக்னேஷ்வரன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதனால் அங்கிருந்து தாக்குதல் நடத்திய கும்பல் தப்பியோடியது. தகவல் அறிந்த உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் கீரனூர் அரசு மருத்துவமனை முன்பு குவிந்து கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கீரனூர் போலீசார் வந்து அவர்களை சமாதானப்படுத்தினர். இதுகுறித்து வழக்கு பதிந்து ராமலிங்கம் (48) என்பவரை கைது செய்தனர். மேலும் தலைமறைவான 7 பேரை தேடி வருகின்றனர். கோவில் திருவிழாவில் இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.















