சுவர் ஏறி குதித்து கணவர் வீட்டிற்கு முன் தர்ணா.. இளம்பெண் பரபரப்பு வாக்குமூலம்!!

524

ஈரோட்டில்..

ஈரோடு கருங்கல்பாளையம் ராமமூர்த்தி நகரில் ஸ்ரீகுமார் (49) – ரஜிதா (35) தம்பதி வசித்து வந்தனர். இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில், கணவன்- மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து தனித்தனியாக வசித்தனர்.

இந்த நிலையில் கருங்கல்பாளையத்தில் உள்ள வீடு தனது பெயரில் இருப்பதாகவும், அந்த வீட்டில் இருந்து கணவர் வெளியேற வேண்டும் என்றும் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ரஜிதா புகார் கொடுத்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த பிரச்சினை தொடர்பாக கணவர் ஸ்ரீகுமாரிடம் பேசுவதற்காக கருங்கல்பாளையத்தில் உள்ள வீட்டுக்கு ரஜிதா நேற்று சென்றார். அப்போது அவர் வீட்டின் முன்பு தரையில் அமர்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறுகையில், எனக்கும்,


எனது கணவருக்கும் ஒரு ஆண்டுக்கு முன்பு விவாகரத்து ஆனது. நான் எனது வீட்டில் இருந்து வரதட்சணையாக கொண்டுவந்த நகைகளை கொடுத்ததால்தான் இந்த வீடு கட்டமுடிந்தது.

வீடும் எனது பெயரில்தான் உள்ளது. இந்த நிலையில், வங்கி கடனில் இருப்பதால் வீட்டை ஜப்தி செய்வதற்கு வங்கி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். இதனால் வீட்டை விற்க முடிவு செய்தபோது அதே பகுதியை சேர்ந்த விஜயகுமார் வீட்டை வாங்க முன்வந்தார்.

வங்கியில் நிலுவையில் இருந்த கடன் ரூ.18 லட்சத்தை அவரே செலுத்தினார். மீதமுள்ள பணத்தை வீடு பத்திரம் கிரையம் செய்யும்போது கொடுப்பதாக தெரிவித்தார். இதற்கிடையே வீடு மீட்கப்பட்ட தகவல் கிடைத்ததும் எனது கணவர் ஸ்ரீகுமார் வீட்டில் வந்து குடியேறினார்.

இந்த வீட்டில் இருந்து எனது கணவர் வெளியேறும் வரை போராட்டத்தை கைவிட மாட்டேன், இவ்வாறு அவர் கூறினார். கடைசிவரை வீட்டின் கதவு திறக்கப்படாததால் ஏணி மூலமாக சுற்றுச்சுவரை ஏறி குதித்து ரஜிதா உள்ளே சென்றார்.

பின்னர் உள்பக்கம் போடப்பட்டிருந்த தாழ்ப்பாளை திறந்து வீட்டை வாங்க வந்த விஜயகுமார் மற்றும் உறவினர்கள், ஆதரவாளர்கள் சிலர் வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்றார்கள். அங்கிருந்த ஸ்ரீகுமாரிடம் அவர்கள் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு சென்று இருதரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது, எனது பெயரில் உள்ள இந்த வீட்டில் எனக்கும்,

எனது மகன்களுக்கும் உரிய பங்கு கிடைக்க வேண்டும், என போலீசாரிடம் முறையிட்டார். ஸ்ரீகுமார் கூறுகையில், இந்த வீடு என் சொந்த சம்பாத்தியத்தில் வாங்கியது.

என்னை மிரட்டி இந்த வீட்டை அவரது பெயரில் மாற்றி எழுதிவிட்டனர். இதனால் சட்டப்படி நீதிமன்றத்தில் சந்திப்பேன் என கூறினார். பின்னர் நீண்டநேரம் பேச்சுவார்த்தை நடத்தி இருதரப்பினரையும் போலீசார் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.