இறந்த மகனின் சடலத்துடன் 200 கி.மீ பயணித்த நபர் : நெஞ்சை உலுக்கும் பின்னணி!!

517

இந்தியா…..

இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் இறந்த மகனின் சடலத்தை பையில் அடைத்து தந்தை ஒருவர் 200 கி.மீ தொலைவு பயணித்துள்ள தகவல் வெளியாகி நொறுங்க வைத்துள்ளது.

ஆம்புலன்ஸ் சேவைக்கு தம்மிடம் பணம் இல்லை என்பதால இறந்த 5 மாத பிஞ்சு குழந்தையின் சடலத்துடன் அரசாங்க பொது பேருந்துகளில் பயணப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

ஆம்புலன்ஸ் சேவைக்கு 8,000 ரூபாய் (98 டொலர்) கட்டணமாக கோரியுள்ள நிலையில், தம்மிடம் அந்த தொகை இல்லை என்பதால் பொது பேருந்தை பயன்படுத்தியதாக தெரிவித்துள்ளார்.


இந்த விவகாரம் தொடர்பில் ஆஷிம் தேப்சர்மா என்ற அந்த நபர் தெரிவிக்கையில், சிலிகுரியில் உள்ள வடக்கு வங்க மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் 6 நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு தமது ஐந்து மாத குழந்தை மரணமடைந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

மருத்துவமனையில் மட்டும் சுமார் ரூ.16,000 செலவிட்டுள்ளதாகவும், ஆனால் ஆம்புலன்ஸ் சேவைக்கு தர தம்மிடம் 8,000 ரூபாய் இல்லாமல் போனது என்றார். இதனையடுத்து பை ஒன்றில் மகனின் சடலத்தை மறைத்துவைத்து, பொதுமக்களுக்கான அரசு பேருந்துகளில் பயணப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

அரசின் 102 ஆம்புலன்ஸ் சேவை என்பது நோயாளிகளுக்கு மட்டுமே இலவசம் எனவும் சடலத்தை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை எனவும் ஆம்புலன்ஸ் சாரதிகள் கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.

தேப்சர்மாவின் இரட்டை குழந்தைகள் நோய்வாய்ப்பட, இருவரும் மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ளனர். ஆனால் நிலைமை மோசமடைய ஒரு குழந்தையுடன் தேப்சர்மாவின் மனைவி ஊருக்கு திரும்பியுள்ளார்.

இந்த நிலையில், சனிக்கிழமை இரவு இன்னொரு குழந்தை சிகிச்சை பலனின்றி மரணமடைய, வடக்கு வங்க மருத்துவக் கல்லூரி ஆம்புலன்ஸ் சேவையை நாடியுள்ளார்.

ஆனால் சடலத்துடன் 200 கி.மீ பயணிக்க 8,000 ரூபாய் கோரியுள்ளனர். பணம் இல்லாத நிலையில் வேறு வழியின்றி, பேருந்து பயணம் மேற்கொண்டு ஊருக்கு சென்றுள்ளார்.