திருமண அழைப்பிதல் வைக்கச் சென்ற புதுமாப்பிள்ளைக்கு நேர்ந்த விபரீதம்.. பெரும் சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்!!

737

தெலங்கானாவில்..

தெலங்கானா மாநிலம் கௌதாலா பகுதியில் உள்ள ஆசிபாபாத் பகுதியைச் சேர்ந்தவர் இளைஞர் குண்ட்லா திருப்பதி (26). இவருக்கும் அதேபகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் அண்மையில் நிச்சயதார்த்தம் நடைபெற்று முடிந்தது. இதனையடுத்து திருமணத்துக்கு நாள் குறித்து, அதற்கான வேலைகளில் இரு வீட்டாரும் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.

அந்த வகையில், புதுமாப்பிள்ளை குண்ட்லா திருப்பதி, உறவினர்கள், நண்பர்களுக்கு திருமண பத்திரிகை கொடுக்கும் பணியில் ஈடுபட்டுவந்தார். இதனிடையே, கடந்த சில நாட்களாக கௌதாலா பகுதியில் வெப்பத்தில் அளவு உயர்ந்து வருகிறது. அதிகபட்சமாக 43 டிகிரி வெயில் கொளுத்தியது.

தனது திருமண ஏற்பாடுகளுக்காக வெயிலில் அலைந்து திரிந்த திருப்பதிக்குத் திடீரென வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி ஏற்பட்டது. பின்னர் உடல்நிலை மோசமானதால் அவரை குடும்பத்தினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால் மாஞ்சேரியில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.


இந்த நிலையில், மருத்துவ சிகிச்சை பலனின்றி இளைஞர் திருப்பதி பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் நேற்று அவருக்கு நடைபெறவிருந்த திருமணம் நின்று போனது. ஒரே குடும்பத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட சோகத்தால் அந்த குடும்பம் மட்டுமின்றி கிராமமும் சோகத்தில் மூழ்கியுள்ளது.

இளைஞர் திருப்பதியின் மூத்த சகோதரன் ஸ்ரீனிவாஸ் உடல்நலக்குறைவால் 6 மாதங்களுக்கு முன் உயிரிழந்தார். இந்த நிலையில் வெயில் கொடுமையால் அவரது தம்பி திருப்பதி உயிரிழந்தார். வெயில் கொடுமையால் மணமகன் பலியான சம்பவம் நாடு முழுவதும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.