கள்ளக்காதல் விபரீதம்.. பரிதாபமாக பறிபோன உயிர்.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

923

ஆவடி..

ஆவடி மாநகரக் காவல் ஆணையரகத்தின் எல்லைக்குட்பட்ட மாங்காடு காவல் நிலையத்தில், கெருகம்பாக்கம், பாலாஜி நகரைச் சேர்ந்த லாவண்யா என்ற பெண் கடந்த 5-ம் தேதி புகார் மனு ஒன்றைக் கொடுத்தார். அந்தப் புகாரில், “என்னுடைய இரண்டரை வயது குழந்தை சர்வேஸ்வரன் கீழே விழுந்ததில், அவனுக்குத் தலையில் காயம் ஏற்பட்டது.

உடனே அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காகக் கொண்டு சென்றோம். தொடர் சிகிச்சைக்குப் பிறகு குணமானவனை வீட்டுக்கு அழைத்து வந்தோம்.

வந்த சில தினங்களிலேயே மீண்டும் அவனுக்கு வலிப்பு வந்தது. அதையடுத்து அதே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, குழந்தை இறந்துவிட்டதாகச் சொன்னார்கள்” எனக் குறிப்பிட்டிருந்தார். அதனடிப்படையில் மாங்காடு போலீஸார் வழக்கு பதிவுசெய்து, விசாரணையில் இறங்கினர்.


அதன்படி முதலில் குழந்தை சர்வேஸ்வரனின் உடல் உடற்கூறாய்வு செய்யப்பட்டு, தாய் லாவண்யாவிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும், இந்த வழக்கின் தொடர் விசாரணையின்போது, தற்போது லாவண்யாவுடன் வாழ்ந்துவரும் மணிகண்டன் என்பவர், அவரின் உண்மையான கணவர் இல்லை என்பது தெரியவந்திருக்கிறது. அதோடு லாவண்யாவின் உண்மையான கணவர் செல்வபிரகாசத்திடம் விசாரித்தபோது, பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்திருக்கின்றன.

இது தொடர்பாக லாவண்யாவின் கணவர் அளித்த தகவல் குறித்து நம்மிடம் பேசிய காவல் அதிகாரிகள், “லாவண்யா, மணிகண்டன் என்பவருடன் திருமணம் மீறிய உறவில் இருந்திருக்கிறார். இந்த விவகாரம் அவருடைய கணவருக்குத் தெரியவரவே, அவருடன் தகராறு செய்துவிட்டு, குழந்தையை எடுத்துக்கொண்டு மணிகண்டனுடன் சென்றுவிட்டார்.

இந்த நிலையில், லாவண்யா மணிகண்டனுடனான உறவுக்கு தன்னுடைய குழந்தை இடையூறாக இருப்பதாகக் கருதியிருக்கிறார். அதையடுத்து, இருவரும் சேர்ந்து குழந்தையைக் கொலைசெய்யும் முடிவுக்கு வந்திருக்கிறார்கள். இது குறித்து முதலில் லாவண்யாவின் கணவர் எங்களிடம் சந்தேகம் தெரிவித்திருந்தார். அதையடுத்து வேறு கோணத்தில் வழக்கை விசாரித்தோம்.

கீழே விழுந்து தலையில் காயம் ஏற்பட்டதால் சிறுவன் இறந்துவிட்டதாக லாவண்யா தெரிவித்திருந்த நிலையில், பிரேத பரிசோதனை அறிக்கையில் குழந்தையின் உடலில் அதிக அளவில் காயங்கள் இருப்பது தெரியவந்தது. அதையடுத்து லாவண்யா, மணிகண்டன் இருவரிடமும் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டதில், குழந்தை அடித்து சித்ரவதை செய்யப்பட்டதால் இறந்தது தெரிந்தது. அதைத் தொடர்ந்து இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி, இருவரையும் கைதுசெய்தோம்” என்றனர்.

இந்த வழக்கில் ஆவடி காவல் ஆணையர் அருண் உத்தரவின்பேரில் மாங்காடு காவல் ஆய்வாளர் ராஜீ தனிப்படை அமைத்து, இருவரையும் கைதுசெய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார். இருவரும் தற்போது நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டிருக்கின்றனர்.

இந்தச் சம்பவம் குறித்து ஆவடி மாநகரக் காவல் ஆணையர் அருண் தனது ட்விட்டர் பக்கத்தில், “இரண்டரை வயது குழந்தை இறந்த விவகாரத்தில், கொலை வழக்கு பதியப்பட்டு, இருவர் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர். ஆதாரங்கள் ஒருபோதும் பொய்த்துப்போவதில்லை” என்று பதிவிட்டிருக்கிறார்.