இரவு நேரத்தில் கடைக்கு சென்ற 7ம் வகுப்பு மாணவனுக்கு நேர்ந்த சோகம் : கதறும் குடும்பம்!!

1115

திருவள்ளூர்…

திருவள்ளூர் மாவட்டம் திருவெற்றியூரை அடுத்துள்ள எர்ணாவூரில் தனியாருக்கு சொந்தமான மினி பேருந்து ஒன்று மோதியதில் 7ம் வகுப்பு படிக்கும் மாணவன், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

எர்ணாவூரைச் சேர்ந்த பசலுதீன் அந்த பகுதியில் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவரது மகன் அமீதுதீன்(12) திருவொற்றியூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 7ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில், எர்ணாவூர் வடக்கு பாரதியார் நகரில் உள்ள கடைக்கு இரவு நேரத்தில் நடந்து சென்று கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த தனியாருக்கு சொந்தமான மினி பேருந்து ஒன்று எதிர்பாராத விதமாக அமீதுதீன் மீது மோதியது.


இதில் பலத்த காயமடைந்து அமீதுதீனை உயிருக்கு போராடி நிலையில், அங்கிருந்தவர்கள் உடனடியாக சிறுவனை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே மாணவன் அமீதுதீன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு போலீஸ் இன்ஸ்பெக்டர் வள்ளி வழக்குப் பதிவு செய்து தலைமறைவான பேருந்து ஓட்டுநரை தேடி வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.