பாலியல் சம்பவங்களை நிறுத்த இதை தவிர வேறு வழியில்லை: பாஜக எம்.எல்.ஏ-வின் சர்ச்சை கருத்தால் கொந்தளிப்பில் மக்கள்!!

565

பாஜக எம்.எல்.ஏ-வின்….

பெற்றோர்கள் தங்கள் மகள்களுக்கு நற்பண்புகளை கற்பித்தால் கற்பழிப்பு சம்பவங்கள் நிறுத்தப்படும் என்று உத்தரபிரதேசத்தின் பல்லியாவில் உள்ள பைரியா தொகுதி பாஜக எம்.எல்.ஏ சுரேந்திர சிங் கூறியது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

ஹத்ராஸில் 19 வயது தலித் பெண் கூட்டுப்பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டு மரணமடைந்த சம்பவம் குறித்து பல்லியாவின் சந்த்பூரில் சுரேந்திர சிங் ஊடகவியலாளர்களுடன் உரையாடினார்.

இதன்போது, நான் ஒரு ஆசிரியர். அரசாங்கம் வாளுடன் நின்றாலும், இதுபோன்ற சம்பவங்கள் நிறுத்தப்படாது. பெற்றோர்கள் தங்கள் மகள்களுக்கு நற்பண்புகளை கற்பித்து வளர்க்கும்போது இதுபோன்ற சம்பவங்கள் நின்றுவிடும்.

பாதுகாப்பை வழங்குவது அரசாங்கத்தின் கடமையாகும், அதேபோல், தங்கள் குழந்தைகளுக்கு நற்பண்புகளை கற்பிப்பது பெற்றோர்களின் கடமையாகும்.


பெற்றோர்கள் கண்ணியமான நடத்தைளை மகள்களுக்கு கற்பிக்க வேண்டும். நற்பண்புகள் மற்றும் அரசாங்கம் ஒன்றிணைந்தால் மட்டுமே நாட்டை அழகாக மாற்றும். வேறு வழியில்லை என சுரேந்திர சிங் கூறினார்.

பாலியல் சம்பவங்களுக்கு முழுக்க முழுக்க பெண்கள் தான் காரணம் என்ற நோக்கத்தில் சுரேந்திர சிங் கருத்து தெரிவித்துள்ளது மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

குழந்தைகள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதற்கு யார் காரணம் என பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும், இத்தகைய கருத்து தெரிவித்த சுரேந்திர சிங் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலர் வலியுறுத்தியுள்ளனர்.