கிருஷ்ணகிரியில்..

கிருஷ்ணகிரி அருகே உள்ள கிட்டம்பட்டியை சேர்ந்தவர் சின்னபையன். இவரது மகன் ஜெகன் (வயது 28), டைல்ஸ் ஒட்டும் தொழிலாளியாக பணியாற்றினார்.
இவரும் கிருஷ்ணகிரி மாவட்டம் அவதானப்பட்டி அருகே உள்ள முழுக்கான் கொட்டாயை சேர்ந்த சங்கரின் மகள் சரண்யா (22) என்பவரும் காதலித்து பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் செய்து கொண்டனர்.

இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் (21.03.2023) அன்று ஜெகன் டேம் ரோட்டில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது சரண்யாவின் தந்தை சங்கர் உள்பட 3 பேர் சேர்ந்து ஜெகனை நடுரோட்டில் சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர்.

இந்த கொலை வழக்கில் பெண்ணின் தந்தை சங்கர், முரளி, நாகராஜ் ஆகிய 3 பேர் நீதிமன்றத்தில் சரண் அடைந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தற்போது சரண்யா கிட்டம்பட்டி அருகே உள்ள வாத்தியார் கொட்டாய் கிராமத்தில் உள்ள தனது கணவர் வீட்டில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த 26-ம் தேதி மாலை சரண்யா வீட்டில் இருந்த போது அவரது தாய் ரத்தினம்மாள் (38) மற்றும் சிலர் அங்கு சென்றுள்ளனர். அப்போது சரண்யாவிடம் அவர்கள், இந்த வழக்கு விசாரணைக்காக நீ கோர்ட்டில் ஆஜர் ஆக கூடாது என மிரட்டியுள்ளனர்.

இதற்கு சரண்யா மறுப்பு தெரிவிக்க, அவர்கள் சரண்யாவை கைகளால் தாக்கியும், ஆபாச வார்த்தைகளால் திட்டியும், கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இந்த நிலையில் இது தொடர்பாக சரண்யா, கிருஷ்ணகிரி நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்,

விசாரணையில் கொலை மிரட்டல் உறுதி செய்யப்பட்டதையடுத்து சரண்யாவின் தாய் ரத்தினம்மாள் (38), உறவினரான சுண்டேகுப்பம் அருகே உள்ள பாறை கொட்டாயை சேர்ந்த பூமணி (34) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மேலும் பாறைகொட்டாய் பகுதியை சேர்ந்த 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர். கைதான 2 பேர் மீதும் ஆபாசமாக பேசுதல், தாக்குதல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.















