கன்னியாகுமரி..

கன்னியாகுமரி மாவட்டம் தமிழக – கேரளா எல்லையான நெட்டா அருகே தனியார் விடுதியில் சுற்றுலா வந்த புதுமணப்பெண் நண்டு உணவு சாப்பிட்டு மூச்சுதிணறலால் உயிரிழந்த சோக சம்பவம் நடந்துள்ளது.

கரூர் மாவட்டம் பசுபதி பாளையம் பகுதியை சேர்ந்தவர் தினேஷ் குமார். பொறியாளரான இவருக்கு கடந்த மூன்று மாதங்களுக்கு முன் கிருபா என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது.

இந்நிலையில், தினேஷ் குமார் தனது மனைவி கிருபாவுடன் கன்னியாகுமரி மாவட்டம், தமிழக – கேரளா எல்லையான நெட்டா பகுதியிலுள்ள சிற்றார் அணையின் கரையில் அமைந்துள்ள தனியார் விடுதி ஒன்றுக்கு நேற்று முன்தினம் சுற்றுலா வந்துள்ளார்.

இந்த நிலையில் விடுதியில் வழங்கப்பட்ட நண்டு உணவை தினேஷ் குமார் – கிருபா தம்பதியினர் விரும்பி சாப்பிட்டுள்ளனர். அப்போது புதுமணப்பெண் கிருபாவுக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதையடுத்து உடனடியாக தங்கள் கையில் வைத்திருந்த சில மருந்துகளை அவர் உட்கொண்டதாக தெரிகிறது. இருப்பினும் மூச்சுத் திணறல் சரியாகவில்லை. நிலைமை மோசமடைந்தையடுத்து குலசேகரம் பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கிருபாவை அனுமதித்துள்ளனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இது குறித்து தகவலறிந்த கடையாலுமூடு காவல்துறையினர் உயிரிழந்த கிருபாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார், விடுதியில் வழங்கப்பட்ட உணவால் உயிரிழப்பு ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிருபாவுக்கு திருமணமாகி மூன்று மாதங்கள் மட்டுமே ஆகிய நிலையில் புதுமணப்பெண் உயிரிழந்தது குறித்து பத்பநாபபுரம் கோட்டாட்சியரும் விசாரணை மேற்கொண்டார். சுற்றுலா வந்த இடத்தில் நண்டு உணவு சாப்பிட்டு மூச்சுத்திணறலால் புதுமணப்பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.















