பலிக்காத வசியம்.. பழிவாங்கிய மனைவி.. கணவனுக்கான வலையில் மாட்டிய மந்திரவாதி.. அதிர்ச்சி சம்பவம்!!

684

திருப்பதி..

தனது கணவரை இரண்டாவது மனைவியிடமிருந்து நிரந்தரமாக பிரிக்க, மந்திரவாதியை வரவழைத்து கொலை செய்துள்ள சம்பவத்தில் முதல் மனைவி கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் திருப்பதியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

சினிமாக்களிலும், சீரியல்களிலும் இரண்டு பெண்கள் ஒரு ஆணுக்கு அடித்துக்கொள்ளும் காட்சிகளை பார்த்திருப்போம். ஆனால், ஆந்திராவில் இதுபோன்று நிஜமான சம்பவம் ஒன்று நடந்திருக்கிறது. அதாவது நெல்லூரில் என்சிசி காலனி பகுதியில் வசித்து வருபவர் ஜாகீர் பாஷா.

இதே ஊரில் இவர் மெடிக்கல் ஷாப் ஒன்றை நடத்தி வருகிறார். இவர் வசித்து வரும் ஏரியாவுக்கு பக்கத்து ஏரியாவில் வசித்து வந்த காவியா இவரது கடையில் வேலை பார்த்து வந்திருக்கிறார்.


அப்போது இவருக்கும் காவியாவுக்கும் இடையே நட்பு மலர்ந்திருக்கிறது. மறுபுறம் காவியாவின் கணவர் கடுமையான உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்திருக்கிறார். ஒரு கட்டத்தில் உடல் நிலை மோசமாகி அவர் உயிரிழந்திருக்கிறார். கணவனையும், குடும்பத்தையும் பிரிந்து நின்ற காவியாவை ஆசை வார்த்தைகள் கூறி ஜாகீர் தன் வலையில் விழ வைத்திருக்கிறார். வேறு வழியின்றி ஜாகீரை நம்பிய காவியா அவரையே திருமணமும் செய்திருக்கிறார்.

ஆனால் இதன் பின்னர்தான் பிரச்னையே வெடித்திருக்கிறது. ஜாகீரை திருமணம் செய்துக்கொண்ட காவியா, சமீராவாக மாறிவிட்டார். மறுபுறம் சமீராவுக்கு ஏற்கெனவே இருந்த மகளை மதம் மாற்ற முடியவில்லை. எனவே முழுமையாக ஜாகீர் குடும்பத்துடன் சேர முடியாமலும், தன்னுடைய சொந்த குடும்பத்தில் பங்கேற்க முடியாமலும் தவித்து வந்திருந்தார். இப்படியே நாட்கள் நகர்ந்துக்கொண்டிருக்க, ஜாகீருக்கு, அஸ்மா எனும் வேறு ஒரு பெண் மீது ஈர்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

இதுவும் காதல் திருமணம் வரை நீண்டிருக்கிறது. ஜாகீரின் முதல் மனைவி சமீரா எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் கேட்காமல் ஜாகீர் அஸ்மாவை இரண்டாவது திருமணம் செய்துக்கொண்டார். இந்த திருமணத்திற்கு பின்னர் ஜாகீர் முதல் மனைவி சமீராவை பெரிய அளவுக்கு கண்டுக்கொள்வதில்லை. இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை என எப்போதாவது வீட்டிற்கு வந்து சென்றிருக்கிறார். இது சமீராவுக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. நம்பி வந்த தன்னை கைவிட்டுவிட்டு மற்றொரு பெண்ணுடன் நெருக்கமாக இருப்பது சமீராவுக்கு பிடிக்கவில்லை.

எனவே ஜாகீரையும்-அஸ்மாவையும் பிரிக்க பல்வேறு வழிகளில் முயன்றிருக்கிறார். ஆனால் எதுவும் கைகொடுக்கவில்லை. அப்போதுதான் கிருஷ்ணா மாவட்டத்தை சேர்ந்த மணிகாந்த் என்பவரின் தொடர்பு சமீராவுக்கு கிடைத்திருக்கிறது. மணிகாந்த் ஓர் மந்திரவாதி.

எனவே இவரை பயன்படுத்தி ஜாகீரை தன்வசப்படுத்த சமீரா திட்டமிட்டுள்ளார். இதற்காக ஆயிரக்கணக்கில் செலவும் செய்திருக்கிறார். மந்திரவாதி மணிகாந்த் ஓரிரு மாதங்கள் வரை இப்படியாக வசிய வேலைகளை செய்து வந்துள்ளார்.

ஆனால் வசியம் எதுவும் பலிக்கவில்லை. எனவே வேறு வழி இல்லையென மாற்று யோசனைக்கு திரும்பியுள்ளார் சமீரா. மந்திரவாதி மணிகாந்தை கொலை செய்து அவரது உடலை அஸ்மா வீட்டில் போட்டுவிட்டால் அது யாருக்கும் தெரியாது என்று சமீராவின் மகளும், அவரது தோழியும் ஐடியா கொடுத்திருக்கின்றனர். அதன்படி மீண்டும் மணிகாந்தை வீட்டிற்கு அழைத்த சமீரா பாலில் ஏராளமான தூக்க மாத்திரைகளை கலந்து கொடுத்திருக்கிறார்.

எதிர்பார்த்தபடி மணிகாந்த் மயங்கிவிடவே சமீராவும் அவரது மகள் மற்றும் தோழி என மூவர் சேர்ந்து மணியை கொலை செய்துள்ளனர். பின்னர் பிணத்தை சாக்கு மூட்டையில் கட்டி அஸ்மா வீட்டில் போட்டிருக்கின்றனர்.

அடுத்தநாள் அஸ்மா வீட்டில் எதிர்பார்த்தபடி போலீஸ் குவிந்தது. ஆனால் இந்த கொலை சம்பவத்தில் எந்த தடயமும் கிடைக்கவில்லை. எனவே போலீஸ் திணறி வந்தது. அப்போதுதான் இவர்களின் கவனம் சமீரா பக்கம் திரும்பியது.

அவர்களிடம் நடத்திய கிடுக்குப்பிடி விசாரணையில் மூவரும் கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். இதனையடுத்து மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கணவருக்காக இரண்டு பெண்கள் சண்டையிட்டு அது கொலையில் போய் முடிந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.