மனநலம் பாதிக்கப்பட்ட மகளின் தலையில் கல்லைப் போட்டுக் கொன்ற தாய்!!

441

திருச்சி….

திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே அரியனாம் பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் சந்திரபோஸ். சென்னையில் உள்ள ஹோட்டலில் தங்கி வேலை பார்த்து வரும் இவருக்கு மஞ்சுளா என்ற மனைவியும் 9 வயதில் மகனும் உள்ளனர்.

jகடந்த ஆறு ஆண்டுகளாக ஊர்க்காவல் படையில் வேலை பார்த்து வந்த மஞ்சுளாவிற்கு, திடீரென மனநலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், கடந்த ஒரு ஆண்டாக வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார்.

இதன் காரணமாக, மஞ்சுளாவிற்கு சிகிச்சை அளிப்பதற்கு ஏதுவாக , அவரது தாய் அன்னக்கிளி, திருச்சி சமயபுரம் அருகிலுள்ள மாகாளிக்குடியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு (மஞ்சுளா பாட்டி) அழைத்து வந்துவிட்டார். மஞ்சுளாவின் மகன் அங்கேயே ஒரு பள்ளியில் படித்து வருகிறார்.


இந்நிலையில், கலைஞரின் மகளிர் உரிமை தொகைக்கு மனு கொடுத்திட, பேரனை விட்டுவிட்டு அரியனாம்பேட்டை கிராமத்திற்கு மஞ்சுளாவை மட்டும், அன்னக்கிளி நேற்று அழைத்து சென்றுள்ளார்.

அந்த வேலைகள் முடிந்த பிறகு, மருத்துவச் சிகிச்சை மேற்கொள்வதற்காக சென்னையில் உள்ள மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்று தாய் அன்னக்கிளி மஞ்சுளாவை அழைத்துள்ளார்.

ஆனால், சிகிச்சைக்கு வர மறுத்த மஞ்சுளா தகராறில் ஈடுபட்டதோடு, அன்னக்கிளியை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. வலி பொறுக்க முடியாத அன்னக்கிளி, ஆத்திரத்தில் மஞ்சுளாவின் தலையில் கல்லை தூக்கி போட்டுள்ளார்.

இதில் மஞ்சுளாவின் மண்டை பிளந்து, சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார் . மகளை கொலைச் செய்த குற்ற உணர்ச்சியில் தொட்டியம் காவல் நிலையத்தில் அன்னக்கிளி சரணடைந்தார்.

இதுகுறித்து வழக்குப் பதிவுச் செய்த தொட்டியம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்தையன் மற்றும் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று மஞ்சுளாவின் சடலத்தை கைப்பற்றி, முசிறி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும், மஞ்சுளாவை அன்னக்கிளி கொலை செய்ததற்கு வேறு ஏதாவது காரணம் இருக்கிறதா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். மனநல பாதிப்புக்கு சிகிச்சை பெற வர மறுத்த மகளை, தாயே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.