இளம்பெண் கொலையில் சிக்கிய பெரியம்மா… கள்ளக் காதலனுடன் சேர்ந்து தீர்த்துக்கட்டியது அம்பலம்!!

638

மதுரையில்..

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள உச்சப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பவுன்ராஜ். இவரது மகள் ராஜலட்சுமி வயது (21). இவர் கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 11-ம் தேதி மாட்டுக்கு தண்ணீர் வைக்க சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.

இதனால் பெற்றோர்கள் உறவினர்கள் பல இடங்களில் தேடியும் ராஜலட்சுமி கிடைக்காததால் ஆஸ்டின்பட்டி காவல் நிலையத்தில் 12ம் தேதி பெற்றோர் புகார் அளித்தனர்.

அதன் அடிப்படையில் இளம் பெண் காணாமல் போனதாக வழக்கு பதிவு செய்து போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் இரண்டு தினங்களுக்கு பின்னர் பவுன்ராஜின் வீட்டு பின்புறம் இருக்கும் வைக்கோல் படப்பின் அருகில் சாக்கு மூடை கிடந்துள்ளது.


அதன் அருகில் சென்ற போது துர்நாற்றம் வீசவே சந்தேகம் அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார் சாக்கு மூட்டையை அவிழ்த்து பார்த்ததில் அழுகிய நிலையில் பெண் உடல் கிடந்தது.

இதனை அடுத்து உடலை கைப்பற்றி போலீசார் விசாரித்த போது இறந்தது ராஜலட்சுமி என தெரிய வந்தது. இதனை தொடர்ந்து போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.

இந்நிலையில் காணாமல் போன அன்று ராஜலட்சுமி அவருடைய பெரியம்மா சாந்தி என்பவர் வீட்டிற்கு சென்றதாக உறவினர் ஒருவர் தெரிவித்தார்.

ஆஸ்டின்பட்டி காவல் ஆய்வாளர் சாரதா,சார்பு ஆய்வாளர் சாமியப்பன் ஆகியோர் தலைமையில் போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் சுப்புராஜ் என்பவரது மனைவி சாந்தியிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது ராஜலட்சுமி அணிந்திருந்த நகைக்காக ஆசைப்பட்டு அவரை வீட்டிற்கு வரவழைத்து கொலை செய்து ராஜலட்சுமி அணிந்த நகைகளை திருடியதை ஒப்புக்கொண்டார்.

மேலும் இறந்த ராஜலட்சுமி உடலை இரண்டு நாட்கள் வீட்டிலேயே வைத்திருந்தால் துர்நாற்றம் வீசியதாகவும் இதனால் உடலை வெளியே கொண்டுவந்து அவருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த அதே ஊரைச் சேர்ந்த முனியாண்டி மகன் சரவணன் என்பவரை அழைத்து இரவில் யாரும் பார்க்காத நேரத்தில் ராஜலட்சுமி உடலை சாக்கு மூட்டையில் கட்டி வீட்டில் பின்புறம் இருந்த வைக்கோல் படப்பின் அருகில் போட்டுவிட்டு சாந்தி வெளியூருக்கு சென்று விட்டதாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து இருவரையும் கைது செய்த போலீசார் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்ற காவலை தொடர்ந்து வழக்கு விசாரணை மதுரை மாவட்ட ஆறாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில்,

வழக்கின் விசாரணை முடிக்கப்பட்டு நேற்று நீதிபதி கிருபாகரன் மதுரம், ராஜலட்சுமியை கொலை செய்த குற்றத்திற்காக சாந்திக்கு ஆயுள் தண்டனை ரூபாய் 20,000 அபராதம் விதித்தும், கொலையை மறைக்க உதவிய சரவணனுக்கு ஐந்தாண்டு சிறை தண்டனை மற்றும் பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்தும் தீர்ப்பளித்தார்.

ராஜலட்சுமி கொலை வழக்கு தொடர்பாக விரைவாக விசாரணை மேற்கொண்டு சாட்சிகளை தயார் செய்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தந்த காவல் ஆய்வாளர் சாரதா உதவி ஆய்வாளர் சாமியப்பன் திருமங்கலம் டிஎஸ்பி வசந்தகுமார் மற்றும் விசாரணையில் ஈடுபட்ட போலீசார் அனைவரையும் மாவட்ட எஸ்பி சிவபிரசாத் பாராட்டினார்.