மும்பையில்..

மும்பையைச் சேர்ந்த தீபக் மாலாகர் என்பவர் சினிமாவில் காஸ்டிங் டைரக்டராக (Casting Director) இருக்கிறார். தீபக்குக்கு கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் 18 வயது பெண் ஒருவரின் அறிமுகம் ஃபேஸ்புக் மூலம் கிடைத்தது.

இதையடுத்து, தீபக் அந்தப் பெண்ணின் பெற்றோரை அணுகி அந்தப் பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகத் தெரிவித்தார். அவர்களும் அதற்கு சம்மதம் தெரிவித்தனர்.
இதையடுத்து, தீபக்கை தங்களது வீட்டிலேயே தங்கவும் அனுமதி கொடுத்தனர். அப்படி தங்கியிருந்தபோது தீபக் அடிக்கடி அந்தப் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு செய்தார்.
ஆனால், அந்தப் பெண் அதை தடுத்ததோடு, `படிப்பு முடிந்த பிறகுதான் திருமணம் செய்து கொள்வேன்’ என்று பிடிவாதமாக இருந்தார். இதையடுத்து, வர்சோவாவிலுள்ள தன் நண்பர் வீட்டுக்கு அந்தப் பெண்ணை அழைத்துச் சென்றார்.

அங்கு வைத்து அந்தப் பெண்ணை பாலியல் உறவுக்கு அழைத்தார். ஆனால், அவர் சம்மதிக்கவில்லை. இதனால் கோபத்தில் பெண்ணின் தலையை சுவரில் ஓங்கி அடித்தார். அதோடு அவரின் முகத்தில் குத்தினார். இதில் அந்தப் பெண் மயங்கி விழுந்துவிட்டார். உடனே அந்தப் பெண் இறந்துவிட்டதாகக் கருதி அங்கிருந்து ஓடிவிட்டார்.

ஆனால், அந்தப் பெண் மயக்கம் தெளிந்து உதவி கேட்டு கத்தியபோது பக்கத்து வீட்டுக்காரர்கள் கதவைத் திறந்து அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்த்தனர். அந்தப் பெண்ணைக் கொலைசெய்ய முயன்ற தீபக்கை போலீஸார் தேடிவந்தனர். அந்தப் பெண் இறந்துவிட்டதாக நினைத்து தீபக் தலைமறைவாக இருந்தார்.

தீபக் சூரத்திலிருந்து தனது நண்பர்கள் சிலருக்கு போன் செய்தார். அதன் மூலம் அவர் சூரத்தில் இருப்பது தெரியவந்தது. அதோடு அவர் ஏடிஎம் மெஷினில் பணம் எடுத்தார். இதையடுத்து, அவர் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்து போலீஸார் அவரைக் கைதுசெய்து மும்பைக்கு அழைத்து வந்தனர்.















