கலப்புத் திருமணம் செய்த மகள்… மகனுடன் சேர்ந்து மகளைக் கொலைசெய்து உடலை எரித்த பெற்றோர்!!

492

டெல்லி..

டெல்லி அருகிலுள்ள குர்காவ் என்ற இடத்தைச் சேர்ந்தவர் அஞ்சலி (22). இவர் சந்தீப் என்பவரை, கடந்த பல ஆண்டுகளாகக் காதலித்துவந்தார். ஆனால், அவர்கள் இருவரும் வெவ்வேறு சாதியைச் சேர்ந்தவர்கள். எனவே, அவர்களது திருமணத்துக்கு அஞ்சலியின் பெற்றோர் அனுமதிக்கவில்லை.

ஆனால், அஞ்சலி தனது முடிவில் உறுதியாக இருந்தார். நீண்ட போராட்டத்துக்குப் பிறகு அஞ்சலி தன் பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி கடந்த 2019-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.

திருமணம் செய்துகொண்ட தங்கள் மகள்மீது அஞ்சலியின் பெற்றோர் தொடர்ந்து கடுங்கோபத்தில் இருந்தனர். அஞ்சலியின் கணவர் பப் ஒன்றில் வேலை செய்துவந்தார்.

கடந்த சில நாள்களாக அஞ்சலியின் பெற்றோர் அடிக்கடி அஞ்சலியின் வீட்டுக்கு வந்து சென்றனர். இந்த நிலையில் அஞ்சலியின் கணவர் சந்தீப், தன் சகோதரியின் வீட்டில் ஏதோ மதச்சடங்கு இருப்பதாகக் கூறிவிட்டு புறப்பட்டுச் சென்றார்.


அவர் வெளியூருக்குச் சென்றிருந்தபோது அவருக்கு அஞ்சலியின் சொந்த ஊரான சுர்ஹதியைச் சேர்ந்த ஒருவர் சந்தீப்புக்கு போன் செய்து அஞ்சலி இறந்துவிட்டதாகவும், அவரது உடலை தகனம் செய்ய சுர்ஹதிக்குக் கொண்டுவந்திருப்பதாகவும் தெரிவித்தார்.

இதனால் அதிர்ச்சியடைந்த சந்தீப் உடனே புறப்பட்டு தனது வீட்டுக்கு வந்தார். ஆனால் வீடு பூட்டப்பட்டிருந்தது. உள்ளே திறந்து பார்த்தபோது ஆடைகள் அனைத்தும் கலைந்து கிடந்தன. அதன் பிறகு விசாரித்தபோதுதான் அஞ்சலி கொலைசெய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

இது குறித்து உடனே அஞ்சலியின் பெற்றோர் குல்தீப், ரிங்கி, அவர்களின் மகன் குணால் ஆகியோர் மீது போலீஸில் புகார் செய்தார். இந்த வழக்கின் அனைத்து ஆதாரங்களையும் அழிக்க அஞ்சலியின் உடலை அவர்களின் பெற்றோர் அந்த கிராமத்திலேயே எரித்ததாகக் கூறப்படுகிறது.

இது குறித்து உதவி போலீஸ் கமிஷனர் வருண், “அஞ்சலி வீட்டில் தனியாக இருந்தபோது அவரது பெற்றோரும், சகோதரரும் சேர்ந்து அவரின் கழுத்தை நெரித்துக் கொலைசெய்திருக்கின்றனர்.

அவர்கள் உடலைத் தோளில் சுமந்து சென்று கட்டடத்துக்கு வெளியில் நின்ற காரில் போட்டு சொந்த ஊருக்கு எடுத்துச் சென்று அவசர அவசரமாக எரித்திருக்கின்றனர். அவர்கள் மூன்று பேரும் கைதுசெய்யப்பட்டு, மேற்கொண்டு விசாரணை நடத்தப்பட்டுவருகிறது” என்று தெரிவித்தார்.