மோகனூரில்..

மோகனூர் அருகே தகாத உறவுக்கு இடையூறால், கணவனை கொன்று நாடகமாடிய மனைவி காதலனுடன் கைது செய்யப்பட்டார். உடந்தையாக இருந்த நண்பரும் சிக்கினார். நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே ஒருவந்தூர் ஊராட்சி செல்லிபாளையம் அருந்ததியர் காலனியை சேர்ந்தவர் பெரியசாமி (37), கட்டிட மேஸ்திரி.
இவரது மனைவி பிரேமா (35). இவர்களுக்கு அனிஷ் (6), ஆகாஷ் (4) என 2 மகன்கள் உள்ளனர். கடந்த 23ம் தேதி அதிகாலை 2 மணிக்கு பிரேமா, காது வலிப்பதாக கூறியதால், மோகனூர் அரசு மருத்துவமனைக்கு பெரியசாமி டூவீலரில் அழைத்து சென்றார்.

பொய்யேரிக்கரை பகுதியில் சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி பெரியசாமி இறந்தார். இதுதொடர்பாக மோகனூர் காவல் நிலையத்தில் பிரேமா புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தினர். அதில் வாகன விபத்தில் பெரியசாமி இறந்தும், பிரேமாவுக்கு சிறிதும் காயம் ஏற்படாதது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.
இதனால், பிரேமாவின் செல்போனை ஆய்வு செய்ததில், தர்மபுரி மாவட்டம் நாட்ராம்பள்ளி பகுதியை சேர்ந்த கேசவன் (எ) நந்திகேசவன் (28) என்பவருடன் அடிக்கடி பேசியதும், அவருடன் பிரேமாவுக்கு தகாத உறவு இருந்ததும் தெரியவந்தது.

இதுகுறித்து பிரேமாவிடம் போலீசார் தீவிரமாக விசாரித்தனர். இதில் அதிர்ச்சி தகவல்கள் வெளியானது. மோகனூரில் பிரேமா ஒரு பேக்கரியில் வேலை செய்து வந்தபோது, உடன் வேலை பார்த்து வந்த தர்மபுரியை சேர்ந்த நந்திகேசவனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
நாளடைவில் தகாத உறவாக மாறியது. அடிக்கடி தனிமையில் உல்லாசமாக இருந்து வந்தனர். இது பெரியசாமிக்கு தெரிய வந்தது. கண்டித்தார். இதனால் பிரேமா வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். இருப்பினும் பிரேமா, நந்திகேசவனுடனான தகாத உறவை கைவிடவில்லை.

செல்போன் மூலம் பேசி வந்தார். காதலனை நேரில் சந்திக்க முடியாமல் தவித்து வந்தார். இதனால், தகாத உறவுக்கு இடையூறாக உள்ள பெரியசாமியை கொலை செய்ய 2 பேரும் திட்டமிட்டனர். இதையடுத்து சம்பவத்தன்று இரவு பிரேமா காது வலி ஏற்பட்டதாக கூறி பெரியசாமியை மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.
இதுபற்றி காதலனுக்கு செல்போனில் தகவல் தெரிவித்தார். பொய்யேரிக்கரை பகுதியில் வந்த போது காதலன் நந்திகேசவன் மற்றும் அவரது நண்பரான காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த தனுஷ் (23) ஆகியோர் சேர்ந்து, டூவீலரை மறித்து பெரியசாமியை இரும்பு கம்பியால் சரமாரி தாக்கினர்.

இதில் பலத்த காயம் ஏற்பட்டு நிகழ்விடத்திலேயே பெரியசாமி இறந்து விட்டார். தொடர்ந்து உறவினர்களிடம் விபத்தில் இறந்து விட்டதாக பிரேமா நாடகமாடியுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து, பிரேமா, நந்திகேசவனை கைது செய்து சிறையில் அடைந்தனர். உடந்தையாக இருந்த தனுசை தனிப்படையினர் காஞ்சிபுரத்தில் மடக்கி பிடித்து கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.















