திருப்பூரில்..

திருப்பூர் தனியார் மருத்துவமனையில் புகுந்து காதலியை கத்தியால் குத்திக்கொலை செய்த காதலன், தானும் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்த சூளை பகுதியை சேர்ந்தவர் மணிவண்ணன். இவரது மகள் சத்யஸ்ரீ (21). இவர் கல்லூரியில் பி.காம் சிஏ படித்துள்ளார்.

கடந்த 2 மாதங்களாக சத்யஸ்ரீ திருப்பூர் குமார்நகர் 60 அடி சாலையில் உள்ள தனியார் பிசியோதெரபி மருத்துவமனையில் வரவேற்பாளராக பணியாற்றி வந்தார். இவருக்கும் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடியை சேர்ந்த நரேந்திரன் (25) என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுக்கு முன்பு சமூக வலைதளம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. நரேந்திரன் லாரி கம்பெனியில் பணியாற்றி வருகிறார். இருவரும் காதலித்து வந்தனர்.

இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில நாட்களாக நரேந்திரனுடன் சத்யஸ்ரீ பேசுவதை நிறுத்தினார். இந்த நிலையில் நேற்று காலை நரேந்திரன் காதலி பணியாற்றும் தனியார் மருத்துவமனைக்கு வந்தார். அங்கு சத்யஸ்ரீயை சந்தித்தார். அப்போது இருவருக்கும் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது.

ஆத்திரமடைந்த நரேந்திரன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சத்யஸ்ரீயின் கழுத்தில் குத்தினார். ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்த சத்யஸ்ரீ சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதை பார்த்த மருத்துவமனைக்கு வந்திருந்த நோயாளிகள் அலறியடித்து ஓடினர்.

காதலி உயிரிழந்த பின் நரேந்திரனும் கத்தியால் தனது கழுத்தை அறுத்து கொண்டார். உயிருக்கு போராடிய நரேந்திரனை அங்கிருந்தவர்கள் மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து திருப்பூர் வடக்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.















