திருவள்ளூர்….

திருவள்ளூர் மாவட்டம் ஆவடியை அடுத்த திருமுல்லைவாயிலை சேர்ந்தவர்கள் முருகன்- சுபா தம்பதியர்கள். இவர்களின் மூத்த மகள் ஸ்வேதா (21). சென்னை செம்மஞ்சேரியில் உள்ளதனியார் கல்லூரி ஒன்றில் கடந்த ஆண்டு பி.காம் பட்டபடிப்பு முடித்த இவர், பல்வேறு தொழில் நிறுவனங்களில் வேலைக்கு நேர்முகத்தேர்வுக்கு சென்று வந்துள்ளார்.

ஆனால் எதிலும் வேலை கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. நேற்று அம்பத்தூரில் உள்ள நிறுவனம் ஒன்றில் நேர்முக தேர்வுக்கு சென்ற ஸ்வேதா, அங்கும் வேலை கிடைக்காததால் மனமுடைந்து வீடு திரும்பியுள்ளார்.

நிறுவனங்களின் தொடர் நிராகரிப்பால் வாழ்க்கையின் மீது விரக்தியில் இருந்த ஸ்வேதா தாய் சுபாவிடம், தொலைபேசியில் பேசிவிட்டு உறங்குவதாக கூறி அறைக்கு சென்றுள்ளார்.

அறைக்கு சென்று வெகுநேரமாகியும் கதவை திறக்காததால் சந்தேகமடைந்த பெற்றோர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது மகள் சுவேதா தூக்கில் தொங்கியபடி இருந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர் உடனடியாக ஆவடி காவல் ஆணையரக திருமுல்லைவாயல் காவல் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருமுல்லைவாயில் காவல் துறையினர் ஸ்வேதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.















