8ம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த சோகம்.. கதறியழும் பெற்றோர்!!

381

சிவகங்கை….

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சுப்ரமணியபுரம் 3வது வீதியைச் சேர்ந்தவர் பாண்டி. இவரது மகள் மேகலா (13) அதே பகுதியில் உள்ள அரசு உதவிப் பெறும் பள்ளியில் 8ம் வகுப்புப் படித்து வந்தார்.

இந்நிலையில், மேகலாவுக்கு கடந்த வியாழக்கிழமை பள்ளியில் இருந்து வந்த போது காய்ச்சல் இருந்துள்ளது. இதையடுத்து, மாணவி மேகலாவை அவரது தந்தை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று ஊசி போட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் காலை மீண்டும் காய்ச்சலால் மேகலா பாதிக்கப்பட்ட நிலையில், மீண்டும் அதே அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது மேகலாவுக்கு ரத்த பரிசோதனை எதுவும் செய்யாமல், எந்த வகையான காய்ச்சல் என்றும் சொல்லாமல் மீண்டும் ஊசி போட்டு அனுப்பி வைத்துள்ளனர்.


மேகலாவுக்கு மீண்டும் காய்ச்சல் வந்ததுடன், தொடர்ந்து வாந்தியும் வந்துள்ளது. இதனையடுத்து, காரைக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மேகலாவை அவரது பெற்றோர் கொண்டுச் சென்றனர். அங்கு ரத்த மாதிரி எடுக்கப்பட்டு ஆய்வுக்காக அனுப்பப்பட்டிருந்த நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு மேகலா பரிதாபமாக உயிரிழந்தார்.

மாணவிக்கு எந்த மாதிரியான நோய் தாக்கம் செய்யப்பட்டது எனக் கண்டறியும் முன்பே, அவர் உயிரிழந்தார். ஆய்வு முடிவுக்கு பின்னரே மாணவியின் மரணத்திற்கான காரணம் தெரிய வரும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். காய்ச்சலுக்கு பள்ளி மாணவி இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.