காதலனோடு சேர்ந்து மாமனை குத்திக் கொலை செய்த வடமாநில இளம்பெண்… தற்கொலை நாடகமாடியது அம்பலம்!!

387

சென்னையில் மாமனைக் கத்தியால் குத்திக் கொலை செய்து விட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடிய வடமாநில பெண் மற்றும் அவரது காதலன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை மாங்காடு அடுத்த கெருகம்பாக்கத்தில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இங்கு வடமாநிலத்தைச் சேர்ந்த ஏராளமானோர் தனித்தனியாக தங்கி கட்டிட வேலை பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த மோகன் புஜக்கர்(38), என்பவர் தன்னைத் தானே கத்தியால் குத்தி தற்கொலை செய்து கொண்டதாக அவரது உறவினரான சோனியா(33) மாங்காடு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து போலீஸார் விரைந்து சென்று மோகன் புஜக்கர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கேஎம்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இச்சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில், பிரேத பரிசோதனை அறிக்கையில் மோகன் புஜக்கர் தன்னைத் தானே கத்தியால் குத்தி தற்கொலை செய்து கொள்ளவில்லை என்றும், யாரோ ஒருவர் கத்தியால் குத்தியதில் அவர் இறந்தாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது .


இதனைத் தொடர்ந்து போலீஸார் மோகன் புஜக்கரின் உறவினரான சோனியா மற்றும் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த சுசாந்தா பர்மன்(44), ஆகிய இருவரையும் பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது சோனியா தனது மாமா மோகன் புஜக்கருடன் தங்கி வேலை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் சோனியாவிற்கும், சுசாந்தா பர்மன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இது தகாத உறவாக மாறியது. மேலும் அடிக்கடி சுசாந்தா பர்மன், சோனியா வீட்டிற்கு வந்து சென்றுள்ளார். இதையறிந்த மோகன் புஜக்கர் இருவரையும் கண்டித்துள்ளார்.

சம்பவத்தன்று சுசாந்தா பர்மன் வீட்டிற்கு வந்து சோனியாவிற்கு வளையல் அணிவித்துள்ளார். அப்போது அங்கு வந்த மோகன் புஜக்கர் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த சுசாந்தாபர்மன் மறைத்து வைத்திருந்த கத்தியால் மோகன் புஜக்கரை மார்பில் குத்திக் கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றது தெரியவந்தது.

மேலும் தாங்கள் போலீஸில் சிக்கிக் கொள்ளாமல் இருக்க, மோகன் புஜக்கர் தனக்குத்தானே கத்தியால் குத்திக்தற்கொலை செய்து கொண்டது போல் நாடகமாடியது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து சோனியா மற்றும் அவரது காதலன் சுசாந்தா பர்மன் ஆகிய இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தகாத உறவுக்கு இடையூறாக இருந்த மாமனை குத்திக்கொலை செய்து விட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடிய பெண், காதலனுடன் கைதான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.