கணவனை கேள்வி கேட்டதால் ஆத்திரம்.. கொலை செய்துவிட்டு உறவினர் ஃபோன் செய்த கொடூரம்!!

237

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் புறவழிச் சாலையில் புதியதாக ஊராட்சி ஒன்றிய அலுவலகம் கட்டப்பட்டு வருகிறது. இதை திருப்பூர் பகுதியைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் கட்டி வருகிறார்.

இந்த கட்டிடத்தில் கொத்தனார் மற்றும் அவருடைய உதவியாளர் பெண் உதவியாளர் என 50க்கும் மேற்பட்டோர் அவர்களுக்கு என தனித்தனி செட் அமைத்து அங்கேயே குடியிருந்து வேலை செய்து வருகின்றனர்.

அதில் கரூர் மாவட்டம் கொசூர் பகுதியை சேர்ந்த 35 வயதுடைய நாகராஜ் அவரது மனைவியான 25 வயதுடைய ராஜகுமாரி மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் ஒரு மகன் என குடும்பத்துடன் சேர்ந்து தங்கி கட்டிட வேலை செய்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நாகராஜ் தனது குடும்பத்துடன் சொந்த ஊருக்கு சென்று வந்த நிலையில் நேற்று காலை தாராபுரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிட பணிக்காக வந்து பகல்

முழுவதும் வேலை செய்துவிட்டு மாலை தனது மேலாளரிடம் பணம் வாங்கிக் கொண்டு அந்த சம்பள பணத்தை வீட்டிற்கு எடுத்துச் செல்லாமல் மது அருந்தி விட்டு தனது ரூமுக்கு வந்துள்ளார்.

அப்பொழுது மனைவி ராஜகுமாரி “ ஏன் இப்படி குடித்துவிட்டு வந்து உடம்பை கெடுத்துக்கொள்கிறீர்கள்” என கேட்டுள்ளார். இதன் காரணமாக கணவன் மனைவி இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.


இதில் ஆத்திரமடைந்த நாகராஜ் மது போதையில் என்ன செய்வதென்று தெரியாமல் இரவு 9 மணி அளவில் அங்கே கிடந்த கட்டையை எடுத்து மனைவியை சரமாரியாக தாக்கியுள்ளார்.

இதனால் ராஜகுமாரிக்கு காயம் ஏற்பட்டு அவ்விடத்திலேயே ரத்த வெள்ளத்தில் மிதந்து உயிரிழந்துள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த நாகராஜ் திருச்சியில் உள்ள தனது உறவினருக்கு போன் செய்துவிட்டு அவரிடம் நடந்ததை கூறிவிட்டு ஃபோனை ஆஃப் செய்து அங்கிருந்து வெளியூருக்கு தப்பி சென்றுள்ளார்.

திருச்சியில் இருந்து அவரது உறவினர்கள் கட்டிடத்தில் தங்கி வேலை செய்யும் மற்ற தொழிலாளிக்கு போன் மூலம் தகவல் தெரிவித்ததை அடுத்து அங்கு வந்து பார்த்த மற்ற தொழிலாளர்கள் தாராபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் ராஜகுமாரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு தப்பி சென்ற நாகராஜை தனிப்படை அமைத்து தேடி வந்துள்ளனர்.

இந்நிலையில் இன்று காலை கரூரில் வைத்து நாகராஜை தாராபுரம் போலீசார் கைது செய்தனர். மது போதையில் கணவர் மனைவியை அடித்து கொன்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.