
டெல்லியில் தீ விபத்தில் உயிரிழந்ததாக கருதப்பட்ட யூ.பி.எஸ்.சி. மாணவர், அவரது காதலியால் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டது போலீஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
தலைநகர் டெல்லியின் திமர்பூர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் ராம்கேஷ் மீனா (32). இவர், யு.பி.எஸ்.சி. தேர்வுக்கு தயாராகி வந்தார். கடந்த 6ம் தேதி, இவரது வீட்டில் இருந்து உடல் கருகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
இந்த சம்பவம் தீ விபத்து காரணமாக நிகழ்ந்திருக்கலாம் என முதலில் சந்தேகிக்கப்பட்டது. ஆனால், சம்பவ இடத்தில் தீ பரவிய விதத்தில் முரண்பாடுகள் இருந்ததால், போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது.
இதனையடுத்து, இது கொலையாக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணையை தீவிரப்படுத்தினர்.
குடியிருப்பில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, தீ விபத்து ஏற்படுவதற்கு சற்று முன்பு இரண்டு ஆண்கள் ராம்கேஷ் மீனாவின் வீட்டிற்குள் நுழைவதும்,
பின்னர் அவர்களில் ஒருவருடன் ராம்கேஷின் காதலி வெளியேறுவதும் பதிவாகியிருந்தது.இதனையடுத்து நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், ‘இது தீவிபத்து அல்ல, தடயங்களை அழிப்பதற்காக அரங்கேற்றப்பட்ட கொடூரமான கொலை’ என்பது உறுதியானது.
இது தொடர்பாக ராம்கேஷ் மீனாவுடன் ‘லிவ்இன்’ பார்ட்னராக வசித்து வந்த அவரது காதலியான அம்ரிதா சவுகான் (21), அம்ரிதாவின் முன்னாள் காதலன் சுமித் காஷ்யப் மற்றும் சந்தீப் குமார் ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
தடயவியல் அறிவியல் மாணவியான அம்ரிதா, இந்தக் கொலையை மிகத் துல்லியமாக திட்டமிட்டு அரங்கேற்றியுள்ளார்.
ராம்கேஷ் மீனா, அம்ரிதாவை ஆபாசமாக வீடியோ எடுத்து வைத்துள்ளதுடன், அதை நீக்க மறுத்ததால் ஏற்பட்ட ஆத்திரத்தில் இந்தக் கொலை நடந்துள்ளது.
முன்னதாக கடந்த 5ம் தேதி இரவு, மூவரும் சேர்ந்து ராம்கேஷ் மீனாவின் கழுத்தை நெரித்து, அடித்துக் கொலை செய்துள்ளனர்.
பின்னர், கொலையை மறைத்து தீ விபத்து போல சித்தரிக்க, அவரது உடல் மீது எண்ணெய், நெய் மற்றும் மதுபானத்தை ஊற்றி, சமையல் எரிவாயு சிலிண்டரை திறந்துவிட்டு தீ வைத்துள்ளனர்.
எரிவாயு விநியோகப் பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்ட சுமித் காஷ்யப், வெடிவிபத்தை ஏற்படுத்தி தடயங்களை அழித்துள்ளார்.
கைதானவர்களிடம் இருந்து கொலைக்கு சான்றாக இருந்த ஹார்டு டிஸ்க் மற்றும் லேப்டாப், செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.















