வீட்டிற்கு வேலைக்கு வந்த பெண்களை..காலில் விழுச்சொல்லி வற்புறுத்திய பாடகர் புஷ்பவனம் குப்புசாமி குடும்பத்தினர்: அதிர்ச்சி தகவல்!!

937

அனிதா குப்புசாமி…….

பிரபல பாடகரான புஷ்பவனம் குப்புசாமி வீட்டில் ஆர்கானிக் பொருட்கள் தயாரிக்கும் பணியில் இருந்த இரண்டு பெண்களை சம்பள பிரச்சனை காரணமாக காலில் விழும் படி வற்புறுத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தின், சென்னை ராஜா அண்ணாமலைபுரம் பாகிரதி தெருவில் பிரபல நாட்டுப்புற பாடகரான புஷ்பவனம் குப்புசாமி வீடு உள்ளது. இந்த வீட்டின் ஒரு பகுதியில் விஹா என்ற பெயரில் ஆர்கானிக் சோப்பு உள்ளிட்ட பொருட்கள் தயாரிக்கும் நிறுவனம் இயங்கி வருகிறது.

இங்கு மாதம் 8 ஆயிரம் ரூபாய் சம்பளத்திற்கு, மயிலாப்பூர் விசாலாட்சி தோட்டம் பகுதியைச் சேர்ந்த 18 வயது மற்றும் 17 வயதுடைய சகோதரிகள் வேலை செய்து வந்துள்ளனர்.

வேலை நாட்கள் போக, விடுமுறை நாட்களாக ஞாயிற்றுக் கிழமை வேலை பார்த்தால், தனியாக 300 ரூபாய் சம்பளமாக தரப்படும் என்று கூறப்பட்டதால், இந்த சகோதரிகள் கடந்த ஞாயிற்றுக் கிழமை வேலை செய்துள்ளனர்.


அதன் படி வேலையில் ஈடுபட்ட சகோதரிகளுக்கு மேலாளர் தில்லை என்பவர் 200 ரூபாய் மட்டும் சம்பளமாக கொடுக்க, இதை தட்டி கேட்ட போது, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதை அடுத்து சகோதரிகள் இருவரையும் மன்னிப்புக் கேட்டுவிட்டு வெளியே செல்லும்படி கூறி வீட்டில் அடைத்து வைத்துள்ளனர். பிரச்சனையை தொடர்ந்து அங்கு வந்த சகோதரிகளின் தாயையும் தகாத வார்த்தைகளில் பேசியதாக கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி, அனிதா குப்புசாமி, அவரை தன் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கும்படி கூறியதாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தகவலறிந்து விரைந்து வந்த பொலிசார் சகோதரிகள் இருவரையும் அவர்களது குடும்பத்தினருடன் அனுப்பி வைத்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.