எவர் கிவன் கப்பல்………..

சூயஸ் கால்வாயின் குறுக்கே சிக்கி, பல நாட்கள் போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்டுள்ள எவர் கிவன் கப்பல் அங்கிருந்து பயணத்தைத் தொடர அனுமதிக்க முடியாது என சூயஸ் நிர்வாகம் அறிவித்துள்ளது.

பல நாட்கள் நீடித்த போக்குவரத்து முடக்கம் காரணமாக கால்வாய் ஆணையம் ஒரு பில்லியன் டொலர் இழப்பீடு கோருகிறது, மேலும் ஒரு உடன்பாடு ஏற்பட்டவுடன் மட்டுமே பயணத்தைத் தொடர அனுமதிக்கும் எனவும் அறிவித்துள்ளது.

கப்பலை மீட்பதற்கு நாங்கள் நிறைய முயற்சி செய்து உழைத்திருக்கிறோம். ஒவ்வொரு நாளும் வருவாயை இழந்தோம். எங்களுக்கு இழப்பீடு கோர உரிமை உண்டு என சூயஸ் கால்வாய் நிர்வாகத் தலைவர் உசாமா ரபி தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரத்தில் ஒரு முடிவு எட்டும் வரையில், எவர் கிவன் கப்பல் தற்போது சூயஸ் கால்வாயின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளுக்கு இடையில் உள்ள Great Bitter ஏரியில் நிறுத்தப்பட்டுள்ளது.

நாள் ஒன்றிற்கு தங்களுக்கு 14 முதல் 15 மில்லியன் டொலர் தொகை வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், பெரும் முயற்சிக்கு பின்னர் எவர் கிவன் கப்பலையும் அதில் உள்ள 3.4 பில்லியன் டொலர் மதிப்பிலான சரக்கையும் பத்திரமாக மீட்டுள்ளதாக உசாமா ரபி சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனிடையே, எவர் கிவன் கப்பல் தாமதமாவதில் தைவானிய கப்பல் நிறுவனமான எவர்க்ரீன் மரைன் பொறுப்பேற்க முடியாது என அதன் தலைவர் Eric Hsieh குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சாத்தியமான சேதம் அனைத்தும் காப்பீட்டால் ஈடு செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதனால், எவர் கிவன் கப்பல் சூயஸ் கால்வாய் பகுதியில் இருந்து வெளியேறுவது மேலும் தாமதமாகலாம் என கூறப்படுகிறது.















