பெரம்பலூர்..

பெரம்பலூர் மாவட்டம், லாடபுரம் கிராமம், மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் மாறப்பன் மகன் நாகராஜன். இவர், அதே ஊரில் மெடிக்கல் கடை நடத்தி வந்தார். இவரிடம் அதே ஊரைச் சேர்ந்த ரவுடிகளான பிரபாகரன், ரகுநாத் ஆகிய இருவரும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இரவு 10 மணியளவில் நாகராஜன் கடையை மூடும் நேரத்தில் வந்து, மிரட்டி மாமூல் வாங்கி சென்றனராம்.

இந்நிலையில் நேற்று இரவு ரவுடிகள் இருவரும், நாகராஜனிடம் மீண்டும் மாமுல் கேட்டு மிரட்டியுள்ளனர். மாமூல் தர மறுத்த நாகராஜனை, ரவுடிகளான பிரபாகரன், ரகுநாத் மற்றும் செந்தில்குமார் மகன் கார்த்திக், சுப்ரமணி மகன் சுரேஷ், ஆனந்த குமார் மகன் அஜித்குமார் ஆகியோர் ஆயுதங்களால் தாக்கிவிட்டு ஓடிவிட்டனர்

நாகராஜன் வீட்டுக்குச் சென்று மயங்கி விழுந்தார். அவரது குடும்பத்தினர் பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு நாகராஜனை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

கொலை செய்த ரவுடிகளை உடனடியாக கைது செய்தால் மட்டுமே பிரேதத்தை பெற முடியும் என கூறி அவரது உறவினர்கள் மற்றும் அக் கிராமத்தினர் பெரம்பலூர் அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த ஏடிஎஸ்பி ஆரோக்கிய பிரகாசம், டிஎஸ்பி சஞ்சீவ்குமார் மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்ட டோரிடம் கொலை குற்றங்களை கைது செய்வோம் என உறுதி அளித்ததின் பேரில் மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் துறையூர் சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது .

இதையடுத்து கொலையில் ஈடுபட்ட ரவுடிகள் 5 பேர் மீது வழக்குப்பதிந்து கைது செய்ய வலியுறுத்தி அக்கிராம மக்கள் பெரம்பலூர் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர்.

இதுகுறித்த புகாரின்பேரில், பெரம்பலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கொலைக் குற்றவாளிகளான ரவுடிகள் பிரபாகரன், கார்த்திக், சுரேஷ், ரகுநாத் ஆகிய 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் தலைமறைவாகவுள்ள அஜித்குமாரை தேடிவருகின்றனர்.

பிரபாகரன், ரகுநாத் ஆகிய இருவர் மீதும் ஏற்கனவே வழிப்பறி, கொலை மிரட்டல் உள்ளிட்ட குற்ற வழக்குகள் பெரம்பலூர் போலீஸ் ஸ்டேஷனில் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.















