
சேலம் மாநகரத்தில் உள்ள பெரிய கொல்லப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன் (31). இவர் குமாரசாமிப்பட்டியில் ஆயுதப்படை காவலராக பணியாற்றி வருகிறார்.
இவரது மனைவி சங்கீதா (27). இவர்களுக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று, ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில், சீனிவாசன் – சங்கீதாவுக்கு இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் சங்கீதா நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதையடுத்து தகவலறிந்து வந்த கன்னங்குறிச்சி போலீசார் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனைக்கு பின்னர் சங்கீதாவின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

மேலும், இந்த தற்கொலை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு, கோட்டாட்சியர் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், சங்கீதாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், பணம் மற்றும் நகை கேட்டு அடிக்கடி கணவன் வீட்டார் துன்புறுத்தி வந்ததாகவும், கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சங்கீதாவிடம் குடும்பச் சொத்தை பிரித்து வாங்கி வருமாறு வற்புறுத்தியதாகவும் கூறியுள்ளனர். அத்துடன் சில நேரங்களில் மனைவியை சந்தேகப்பட்டு தகராறில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது.

இதனால், மனமுடைந்த சங்கீதா “என்னை யாருக்கும் பிடிக்கவில்லை”, இதனால் இந்த முடிவை எடுத்துள்ளேன் என சகோதரியின் வாட்ஸப் எண்ணிற்கு ஆடியோ அனுப்பிவிட்டு, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
எனவே சீனிவாசன் குடும்பத்தார் மீது வழக்குபதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பெற்றோர் கேட்டுக்கொண்டனர்.















