கல்யாணம்…

கொரோனா தொற்று பரவல் காரணமாக, உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மேற்கு வங்க மாநிலத்தில் திருமண நிகழ்ச்சிகளில் 200 பேருக்கு மேல் பங்கேற்கக் கூடாது என அம்மாநில அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் சந்தீபன் சர்கார், அதிதி தாஸ். இவர்கள் இருவரும் வரும் ஜன., 24ஆம் தேதியன்று திருமணம் செய்துகொள்ள உள்ளனர். மணமகன் சந்தீபன் சமீபத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்துள்ளார்.

இதனால் தங்களது திருமணத்தை அதிகமாக கூட்டம் கூடாமல் இணைய வழியிலேயே நடத்த முடிவு செய்துள்ளனர். 100 பேரை மட்டுமே நேரில் பங்கேற்க அழைத்துள்ளனர். தங்களது உறவினர்கள், நண்பர்கள் என 350 பேரை கூகுள் மீட் மூலம் திருமணத்தில் கலந்துகொள்ள ஏற்பாடு செய்துள்ளனர்.

கூகுள் மீட் மூலம் கலந்துகொள்ளும் இந்த 350 பேருக்கும் Zomato மூலம் உணவு டெலிவரி செய்ய ஏற்பாடு செய்துள்ளனர்.

முன்னதாக, திருமண அழைப்பிதழில் திருமணத்திற்கு மொய் செய்வதாக இருந்தால் ‘கூகுள் பே’ மூலம் செலுத்தி விடலாம் என்றும், பரிசுப் பொருட்களை அனுப்புவதாக இருந்தால் ஃப்ளிப்கார்ட் மூலம் ஆர்டர் செய்து அனுப்பி வைக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

சந்தீபன் சர்கார், அதிதி தாஸ் இருவரும் ஆன்லைனில்தான் முதன்முதலில் சந்தித்து காதலிக்கத் தொடங்கியுள்ளனர். இப்போது ஆன்லைன் மூலமாகவே திருமணமும் செய்யவுள்ளனர். இந்தச் செய்தி சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.

ஆன்லைன் திருமண ஏற்பாடு தொடர்பாக மணமகன் சர்கார் பேசுகையில், “நான் கொரோனா பாதிப்பில் இருந்து சமீபத்தில்தான் குணமடைந்தேன்.

எனவேதான் திருமணத்துக்கு வெளியூரில் வரும் விருந்தினர்களுக்கும் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுவிட கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆன்லைன் திருமணம் என்கிற முடிவை எடுத்தோம்.

முதலில் இந்த முடிவைச் சொன்னபோது அனைவரும் சிரித்தனர். அந்தச் சிரிப்புதான், நாம் ஏன் இதை ஒரு முன்மாதிரியாக செய்யக்கூடாது என்று என்னை யோசிக்கவைத்தது.

எங்களது பெற்றோர்கள் இதற்கு சம்மதம் தெரிவித்தனர். அனைவரும் முன்னிலையிலும் இப்போது எங்கள் திருமணம் நடக்கவிருப்பதில் மகிழ்ச்சி” எனத் தெரிவித்துள்ளார்.















