தமிழகத்தில்..

தமிழகம், தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தை அடுத்த அனுமந்தபுரம் கிராமத்தை சேர்ந்த மாதேஷ் (27) என்பவருக்கும், போச்சம்பள்ளியை அடுத்த புளியம்பட்டி கிராமத்தை சேர்ந்த லோகநாயகி (27) என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்கள், இருவரும் இயற்கை மீதான ஆர்வம் கொண்டவர்கள்.

மேலும், இவர்கள் இருவருமே வேளாண்மை பட்டப்படிப்பு படித்தவர்கள். இந்நிலையில், லோகநாயகி கர்ப்பமானதையடுத்து தனது வீட்டிலேயே இயற்கை முறையில் பிரசவம் ஆக வேண்டும் என்று கணவரிடம் கூறியதாக கூறப்படுகிறது.
இதனால், இயற்கை முறையில் எப்படி குழந்தை பெற்றுக்கொள்வது என்று யூடியூபில் பார்த்துள்ளனர். இந்நிலையில், லோகநாயகிக்கு நேற்று காலை வலி வந்துள்ளது.

அப்போது, பேசியபடியே யூடியூப் பார்த்து கணவர் மாதேஷ் மனைவிக்கு பிரசவம் பார்த்துள்ளார். அப்போது, அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. பின்னர், லோகநாயகிக்கு திடீரென ரத்தப்போக்கு அதிகமாகி மயக்கமானார். இதனையடுத்து, அவரை போச்சம்பள்ளியில் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே லோகநாயகி இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து மாதேஷிடம் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இயற்கை முறையில் பிரசவம் பார்த்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.















