அடுத்தடுத்து 45 கத்திக்குத்து : மனைவியை துடிதுடிக்க குத்திக் கொன்ற கணவன்!!

217

இத்தனைக் கொடூரமாக கொலை செய்யும் அளவுக்கு வன்மம் இருந்துள்ளதா என்று அப்பகுதி மக்கள் இன்னமும் அதிர்ச்சியில் இருந்து மீளாமல் உள்ளனர்.

பெங்களூருவில் மனைவியை அடுத்தடுத்து 45 முறை கத்தியால் குத்தி கொலை செய்த கணவன், அதன் பின்னர் தானும் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவர் துபாயில் கட்டுமான நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தவர். இவருக்கும் கள்ளக்குறிச்சியை சேர்ந்த மஞ்சு என்பவருக்கும் கடந்த 2022ல் திருமணம் நடந்தது. ஆனால் குழந்தையில்லை.

திருமணத்திற்குப் பிறகு ரமேஷ் துபாய் சென்ற நிலையில், அவரது மனைவி மஞ்சு பெங்களூருவில் தனியார் மருத்துவமனை ஒன்றில் நர்சாக பணியாற்றி வந்தார். பெங்களூரு உல்லால் மெயின் ரோட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் மஞ்சு வாடகை வீட்டில் தங்கி வேலைக்கு சென்று வந்தார்.

சமீபத்தில் ரமேஷ் தனது மனைவியை காண விடுமுறையில் பெங்களூருவுக்கு வந்திருந்தார். சம்பவத்தன்று அவர்களின் வீட்டுக் கதவு வெகு நேரமாக கதவு திறக்கப்படாமல் இருந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் மஞ்சுவின் தந்தைக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து அங்கு விரைந்து சென்ற மஞ்சுவின் தந்தை, தன்னிடம் மகள் கொடுத்த மாற்று சாவியைப் பயன்படுத்தி கதவை திறந்து பார்த்த போது, கத்தியால் குத்துபட்ட நிலையில் மஞ்சு ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தார். அருகிலேயே மின் விசிறியில் தூக்கிட்ட நிலையில் ரமேஷூம் சடலமாக தொங்கினார்.


இது குறித்து தகவல் அறிந்து விரைந்து சென்ற பெங்களூரு போலீசார், இருவரின் சடலங்களையும் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையில் மஞ்சுவை கொலை வெறியுடன் அவரது கணவர் 45 முறை கத்தியால் குத்தி கொலை செய்திருந்தது தெரிய வந்தது.

குடும்ப பிரச்சினை காரணமாக ஏற்பட்ட தகராறில் மஞ்சுவை கொலை செய்துவிட்டு, அவரது கணவர் ரமேஷ் தற்கொலை செய்து கொண்டாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இது குறித்து இருவரின் உறவினர்களிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.