அப்பாவின் 2வது மனைவியை கொலை செய்த இளைஞன்.. அதிர்ச்சிக் காரணம்!!

403

தேனி…

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி தாலுகா வருசநாடு அருகே உள்ள மணலாத்துக்குடிசை கிராமத்தில் வசித்து வருபவர் வேல்பாண்டி. இவர் விவசாயம் செய்து வருகிறார். அவருடைய மனைவி பழனியம்மாள். இவர்களுக்கு 2 மகன்கள்.

இந்நிலையில் அதே ஊரில் வசித்து வரும் கணவரை இழந்த ஜோதியுடன் வேல்பாண்டிக்கு பழக்கம் ஏற்பட்டது. 4 ஆண்டுகளுக்கு முன்பு வேல்பாண்டி ஜோதியை 2வது திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகு வேல்பாண்டி, ஜோதியுடன் கேரள மாநிலத்துக்கு சென்றார்.

மணலாத்துக்குடிசை கிராமத்தில் பழனியம்மாள் தனது 2 மகன்களுடன் வசித்து வந்தார். இதில் இளைய மகன் ரவிக்குமார் தென்னை மரம் ஏறும் தொழில் செய்து வந்தார். இந்நிலையில் கேரளாவில் வசித்து வந்த வேல்பாண்டி- ஜோதி தம்பதியினர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு வருசநாடு அருகே பொன்னன்படுகை கிராமத்திற்கு வந்தனர்.


இவர்கள் அங்கு உள்ள ஒரு தென்னந்தோப்பில் தங்கி கூலி வேலை செய்து வந்தனர். நேற்று பிற்பகல் வேல்பாண்டி மகன் ரவிக்குமார் தென்னந்தோப்புக்கு சென்ற போது ஜோதி மட்டும் தனியாக இருந்தார்.

அவரைக் கண்டதும் ரவிக்குமார், ‘என் அம்மா வாழ்க்கையை கெடுத்து விட்டு நீ மட்டும் சந்தோசமாக வாழ்கிறாயா?’ எனத் தகராறில் ஈடுபட்டார். மேலும் ஆத்திரம் அடைந்த ரவிக்குமார், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ஜோதியை சரமாரியாக வெட்டியுள்ளார்.

இதில் கழுத்து மற்றும் தலையில் வெட்டுப்பட்ட ஜோதி அலறினார். சிறிது நேரத்தில் ரத்த வெள்ளத்தில், சம்பவ இடத்திலேயே ஜோதி பரிதாபமாக உயிரிழந்தார். ஜோதியின் அலறல் சத்தம் கேட்டு, தோப்பில் வேலை செய்து கொண்டிருந்த வேல்பாண்டி ஓடி வந்தார். அங்கிருந்து தப்பியோட முயன்ற ரவிக்குமாரை, அக்கம் பக்கத்தினர் மடக்கிப் பிடித்தனர் .

அங்கு விரைந்து வந்த போலீஸார், இறந்த ஜோதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் வழக்குப் பதிவு செய்து ரவிக்குமாரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தந்தையின் 2வது மனைவியை தொழிலாளி தீர்த்து கட்டிய சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.