அமெரிக்காவில் தொடரும் சோகம்… சுற்றுலா சென்ற போது விபத்தில் 2 குழந்தைகளுடன் இந்திய தம்பதி உடல் கருகி பலி!!

575

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் வசித்து வந்த தம்பதி வெங்கட் – தேஜஸ்வினி . இவர்கள் தங்களது 2 குழந்தைகளுடன் அமெரிக்காவுக்கு சுற்றுலா சென்றிருந்தனர்.

அட்லாண்டா நகரில் உள்ள தங்கள் உறவினர்களைச் சந்தித்துவிட்டு, டல்லாஸ் நகருக்கு நேற்று காரில் திரும்பிக் கொண்டிருந்தனர். கிரீன் கவுன்டி பகுதியில் கார் வந்து கொண்டிருந்தபோது, தவறான திசையில் அதிவேகமாக வந்த மினி லாரி, இவர்களது கார் மீது நேருக்கு நேர் மோதியது.

இதில், கார் தீப்பிடித்து எரிந்ததில், காருக்குள் சிக்கிக்கொண்ட குடும்பத்தினர் நால்வரும் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். கார் முற்றிலும் தீயில் கருகி சாம்பலானதால், மீட்கப்பட்ட உடல்களின் பாகங்களை (எலும்புகள்) தடயவியல் சோதனைக்கு போலீஸ் அதிகாரிகள் அனுப்பியுள்ளனர்.

டி.என்.ஏ பரிசோதனை மூலம் அடையாளம் உறுதி செய்யப்பட்ட பின்னரே, உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என டெக்சாஸ் காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த துயரச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த அவர்களது குடும்பத்தினர், மத்திய , மாநில அரசுடன் தொடர்பு கொண்டு உயிரிழந்தவர்களின் நிலவரம் குறித்தும், அவர்களின் உடல்களை கொண்டு வருவது குறித்தும் கோரிக்கை விடுத்துள்ளனர். மத்திய அரசின் தரப்பில், அமெரிக்காவில் இருக்கும் இந்திய தூதரகங்கள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக கடந்த செப்டம்பர் மாதம், டெக்சாஸின் அன்னா நகர் அருகே நடந்த கோரமான விபத்தில், காரில் பயணம் செய்த ஆரியன் ரகுநாத், ஃபரூக் ஷேக், லோகேஷ் பலசர்லா மற்றும் தர்ஷினி வாசுதேவன் ஆகிய 4 இந்தியர்கள் உடல் கருகி உயிரிழந்தனர்.


இதேபோல், கடந்த ஆகஸ்ட் மாதம் டெக்சாஸில் நடந்த மற்றொரு கார் விபத்தில், இந்திய வம்சாவளி தம்பதியினர் மற்றும் அவர்களது மகள் ஆகியோர் தீயில் சிக்கி உயிரிழந்தனர்.

அமெரிக்காவில் இதுபோன்ற தொடர் சம்பவங்கள் அங்கு வசித்து வரும் இந்திய சமூகத்தினரிடையே பெரும் சோகத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.