
பள்ளி தாளாரும், அவரது மகனும் ஆசிரியைக்கு பாலியல் தொல்லைக் கொடுத்த சம்பவம் கடலூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகே விஜயமாநகரம் புதுவிளாங்குளம் கிராமத்தை சேர்ந்த ராதிகா,
கடந்த 13 ஆண்டுகளாக வீரா ரெட்டி குப்பம் கிராமத்தில் உள்ள தனியார் மழலையர் தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்தார். கடந்த 19-ஆம் தேதி திடீரென வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்த நிலையில்,
மங்கலம்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ராதிகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவனைக்கு அனுப்பினர்.
போலீசார் விசாரணையில் தெரியவந்ததாவது, ராதிகா பணிபுரிந்த பள்ளியின் தாளாளரின் மகன் பிரின்ஸ் நவீன் கடந்த 10 ஆண்டுகளாக ராதிகாவை காதலித்து வந்தார்.
ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக திருமணம் செய்ய மறுப்பதை தெரிவித்ததால் ராதிகா மனவேதனை அடைந்து தற்கொலை செய்தார். இதுகுறித்து ராதிகாவின் தந்தை காவல் துறையில் புகார் அளித்துள்ளார்.
மேலும், ராதிகா பணிபுரிந்த தனியார் பள்ளியின் தாளாளர் மற்றும் அவரது மகன் கடந்த சில ஆண்டுகளாக பள்ளியில் பணிபுரியும் ஆசிரியைகள் மீது பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனால், மங்கலம்பேட்டை காவல் துறையினர் பிரின்ஸ் நவீனை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது, மேலும் பாதிக்கப்பட்டவரின் தாய் பள்ளியின் உரிமத்தை ரத்து செய்ய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.















