இன்ஸ்டா தோழியை பார்க்க சென்ற நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

505

மதுரையில்..

மதுரை கரிமேடு பகுதியை சேர்ந்த இளைஞர்களான வினித்குமார் என்பவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ஜாக்ஸ் என்பவருக்கும் இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்துள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பாக வினித்குமாரின் கொலை முயற்சியில் இருந்து ஜாக்ஸ் தப்பியுள்ளார். அதன்பின்னர் ஜாக்ஸ் தனது தங்கை அனுஷியாவிடம், வினித்குமார் தன்னை கொலை செய்ய முயன்றதாக கூறியுள்ளார்.

இதனைக்கேட்டு ஆத்திரமடைந்த அனுஷியா தனது அண்ணனை கொலைசெய்ய முயன்ற வினித்குமாரை பழிவாங்க நினைத்துள்ளார். இதற்காக தனது கணவருடன் சேர்ந்து சதி திட்டம் திட்டியுள்ளார்.

அதன்பேரில் போலியான பெயரில் இன்ஸ்டாகிராமில் கணக்கு துவக்கியுள்ளார். வினித்குமாருக்கு இன்ஸ்டாகிராம் வாயிலாக ஃப்ரெண்ட் ரெக்வஸ்ட் கொடுத்துள்ளார்.


தான் கோவையில் நர்சிங் படித்துவருவதாக கூறி கடந்த சில வாரங்களாக வினித்குமாரிடம் நாள்தோறும் பழகிவந்துள்ளார். இந்நிலையில் கடந்த 6ம் தேதியன்று தான் தோழியுடன் மதுரைக்கு வந்திருப்பதாக கூறியுள்ளார். தன்னை சந்திக்க பீபீகுளம் பகுதியில் ஒரு வணிக வளாகத்துக்கு வருமாறு வினித்குமாரை அழைத்துள்ளார் அனுஷியா.

ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு வினித்குமாரை அழைத்த அனுஷியா, அவரின் கணவர் ஜானி முருகனும் அவரது நண்பர் திருப்பதியும் மறைத்து வைத்திருந்த வாள், அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கியுள்ளனர்.

வினித்குமார் கூச்சலிட்டவுடன் அனுஷ்யா மற்றும் அவரது கணவர் உள்ளிட்டோர் தப்பி ஓடியுள்ளனர். படுகாயங்களுடன் இருந்த வினித்குமார் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து தல்லாகுளம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், ஜாக்ஸ்சின் சகோதரியான அனுஷ்யா போலியான இன்ஸ்டா கணக்கின் மூலம் வினித்குமாரை காதலிப்பது போல நடித்து கொலை செய்ய திட்டமிட்டது தெரியவந்துள்ளது. பின், அனுஷியா, அவரது கணவர் ஜானி முருகன், அனுஷியாவின் தோழி சரண்யா, நண்பர் திருப்பதி ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.