தமிழகத்தில்..

பாவூர்சத்திரம் அருகே, மனைவி வீட்டரால் மன உளைச்சலுக்கு ஆளானதாக கபடி வீரர் கடிதம் எழுதிவைத்துவிட்டு விஷம் குடித்துத் தற்கொலை செய்துகொண்டார். இந்தச் சம்பவம் குறித்து போலிஸிடம் விசாரித்தோம். அப்போது நம்மிடம் பேசியவர்கள்,
“தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் அருகேயுள்ள குரும்பலாபேரி உலகாசிபுரத்தைச் சேர்ந்தவர் அருணாச்சலம் (வயது 28), கபடி வீரர். இவருக்கும், பாவூர்சத்திரத்தை அடுத்த செட்டியூர் பகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கும் இடையே கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பாகத் திருமணம் நடந்திருக்கிறது.

பாவூர்சத்திரத்தில் விளையாட்டு உபகரணங்கள் விற்பனை செய்யும் கடை நடத்திவந்த அருணாசலம், அதோடு சேர்த்து சிறு சிறு தொழில்களையும் செய்துவந்தார். சிறந்த கபடி வீரராகவும் திகழ்ந்ததால், மிகப் பிரபலமான புரோ கபடி லீக்கில் ‘ஜெய்ப்பூர் பேந்தர்ஸ்’ அணிக்காகத் தேர்வாகி விளையாடிவருகிறார் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அருணாசலத்தின் மனைவி, பிரசவத்துக்காக அவரின் தந்தை வீட்டுக்குச் சென்றுவிட்டார். இந்த நிலையில் அருணாசலம் செய்துவந்த தொழிலுக்கு, அவரின் மாமனார் சுப்பிரமணியன் பல்வேறு இடர்ப்பாடுகளை ஏற்படுத்திவந்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் தொழிலிலும் சில நெருக்கடிகளை அருணாசலம் சந்தித்திருக்கிறார். இதைத் தொடர்ந்து, கடும் மன உளைச்சலுக்கு ஆளான அருணாசலம், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்திருக்கிறார். தொடர்ந்து, ‘தனது இறப்பிற்கு காரணம் மாமனார் சுப்பிரமணியன்தான்’ என கடிதம் எழுதிவைத்ததுடன்,

தன்னுடைய மனைவி குடும்பத்தினரால் தனக்கு ஏற்பட்ட பிரச்னைகளை வீடியோவாகவும் பதிவுசெய்து சமூக வலைதளமான வாட்ஸ்அப்பில் பதிவுசெய்துவிட்டு விஷம் குடித்துத் தற்கொலை செய்ய முயன்றிருக்கிறார். அப்போது வீட்டுக்கு வந்த உறவினர்கள்,
வீட்டில் மயங்கிக்கிடந்த அருணாச்சலத்தை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர்களின் கவனிப்பில் இருந்துவந்த அவர், சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் குறித்து பாவூர்சத்திரம் போலீஸில் புகார் அளிக்கப்பட்டது.
அதன்பேரில் வழக்கு பதிவுசெய்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்” என்றனர். இந்த நிலையில் கபடி வீரர் அருணாசலம், தான் தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பாக செல்போனில் வீடியோ பதிவு வெளியிட்டது தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவிவருகிறது.















