மும்பையில்..

மும்பையிலுள்ள நட்சத்திர ஹோட்டல்களில் இளம்பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்வதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இந்தப் பாலியல் தொழிலுக்கு போஜ்புரி நடிகை மீனா குமாரி என்பவர்தான் பெண்கள், மாடல் அழகிகளை சப்ளை செய்வதாகவும் போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீஸார் பாலியல் தொழில் நடப்பதை உறுதிசெய்ய போலி வாடிக்கையாளர் ஒருவரை ஏற்பாடு செய்து நடிகைக்கு போன் செய்தனர்.

போலி வாடிக்கையாளர் நடிகைக்கு போன் செய்து மூன்று பெண்களை அனுப்பிவைக்கும்படி கேட்டுக்கொண்டார். நடிகை அந்த வாடிக்கையாளரிடம் ஒரு பெண்ணுக்கு 50,000 முதல் 80,000 வரை கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரிவித்தார். அதற்கு ஒப்புக்கொண்ட வாடிக்கையாளர், பெண்களை கோரேகாவ் ஆரே காலனியிலுள்ள பிரபல நட்சத்திர ஹோட்டலுக்கு அனுப்பிவைக்கும்படி கேட்டுக்கொண்டார்.

இதையடுத்து, நடிகை மீனா குமாரி மூன்று பெண்களையும் அழைத்துக்கொண்டு ஹோட்டலுக்கு நேரில் வந்தார். உடனே போலி வாடிக்கையாளர் வெளியில் நின்றுகொண்டிருந்த போலீஸாருக்குத் தகவல் கொடுத்தார். போலீஸார் உடனே ரெய்டு நடத்தி நடிகை மீனா குமாரியைக் கைதுசெய்து பெண்களை மீட்டனர். மீனா குமாரி அதிக அளவில் போஜ்புரி படங்களில் நடித்திருக்கிறார்.

அவரிடம் நடத்திய விசாரணையில் கஷ்டப்படும் மாடல் அழகிகள், நடிகைகளிடம் பணத்தாசை காட்டி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திவந்தது தெரியவந்தது. அதோடு மாடல் அழகிகளைப் பாலியல் தொழிலில் ஈடுபட ஒப்பந்தத்தில் கையெழுத்தும் வாங்கிக்கொண்டது தெரியவந்தது. அவர் எத்தனை பெண்களை இதில் ஈடுபடுத்திவருகிறார் என்பது குறித்து விசாரித்துவருகின்றனர்.

சமீபத்தில் டி.வி நடிகை ஆர்த்தி மித்தல் என்பவர் பாலியல் தொழிலில் பெண்களை ஈடுபடுத்தியதாக கோரேகாவில் கைதுசெய்யப்பட்டார். ஆர்த்தி மித்தல் சில படங்களில் நடிக்கவும் செய்திருக்கிறார். அவர் தன்னிடம் நடிக்க வாய்ப்புக் கேட்டு வரும் நடிகைகளிடம் பேசி பாலியல் தொழிலில் ஈடுபடவைத்தார்.

அதிகப் பணம் கிடைக்கும் என்று ஆசைவார்த்தைக் கூறி ஆர்த்தி இந்தக் காரியத்தில் ஈடுபட்டார். தொடர்ச்சியாக இரண்டு நடிகைகள் பாலியல் தொழில் நடத்தியதாகக் கைதுசெய்யப்பட்டிருப்பதையடுத்து இதில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பிருக்கிறது என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.















