காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் துடிக்க துடிக்க கழுத்தை நெரித்து காதலியின் தாய் கொடூர கொலை : காதலன் கைது : பகீர் வாக்குமூலம்!!

427

காதலிக்க எதிர்ப்பு தெரிவித்ததால், காதலியின் தாயை கழுத்து நெரித்து கொலை செய்த காதலனை போலீசார் கைது செய்தனர். சென்னை முகப்பேர் கிழக்கு சர்ச் சாலையை சேர்ந்தவர் மைதிலி (60).

கணவரை பிரிந்த இவர், மகள் ரித்திகா (26) என்பவருடன், அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார்.

போரூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் ரித்திகா, தன்னுடன் பணியாற்றி வரும் முகப்பேர் கோல்டன் ஜார்ஜ் நகர் பகுதியை சேர்ந்த ஷியாம் (28) என்பவரை காதலித்து வந்துள்ளார்.

இதுபற்றி அறிந்த மைதிலி, தனது மகளை கண்டித்துள்ளார். மேலும் ரித்திகா தினமும் நள்ளிரவில் வீட்டுக்கு வந்ததால், இனிமேல், வேலைக்கு செல்ல வேண்டாம், என எச்சரித்துள்ளார்.

ஆனால் அதை மீறி, நேற்று முன்தினம் நள்ளிரவு ரித்திகா வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, தாய் மைதிலி தனது மகளை கண்டித்ததால், அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து வீட்டைவிட்டு வெளியே வந்த ரித்திகா, காதலன் ஷியாமை செல்போனில் தொடர்புகொண்டு, ‘‘நமது காதலுக்கு எனது அம்மா எதிர்ப்பு தெரிவிக்கிறார். இனிமேல உன்னுடன் பேசக்கூடாது என்று எச்சரிக்கை செய்கிறார்.


இதனால் எனக்கு பயமாக உள்ளது. எனவே, நீ உடனடியாக என் வீட்டுக்கு வா,’ என்று கூறியுள்ளார். இதையடுத்து ஷியாம் உடனடியாக அங்கு வந்து, ரித்திகாவின் தாய் மைதிலியிடம், ‘‘நான் உங்கள் மகளை காதலிக்கிறேன்.

அவளைத்தான் திருமணம் செய்ய உள்ளேன். இதற்கு நீங்கள் தடையாக இருக்க கூடாது. உங்களது மகளிடம் சண்டை போடவும் கூடாது. மீறினால் நடப்பதே வேறு,’’ என்று சண்டையிட்டுள்ளார்.

அதற்கு மைதிலி, ‘‘நீ யார், என் வீட்டிற்கு வந்து என்னையே மிரட்டுகிறாய். முதலில் வெளியே போ. எனது மகளை கண்டிக்க எனக்கு உரிமை உள்ளது. இதுபற்றி கேட்க உனக்கு என்ன அதிகாரம் உள்ளது.

இனிமேல், நீ எனது மகளிடம் பேசுவது தெரிந்தால், போலீசில் பிடித்து கொடுத்து விடுவேன்,’’ என்று எச்சரித்துள்ளார். இதனால், அவர்கள் இடையே வாக்குவாதம் முற்றியது.

ஆத்திரமடைந்த ஷியாம், மைதிலியை தாக்கியதில் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். பின்னர் அவரது கழுத்தை பிடித்து துடிக்க துடிக்க நெரித்துள்ளார். அப்போது, மைதிலி உயிருக்கு போராடியுள்ளார்.

அப்போதும் விடாமல் கழுத்தை இறுக்கியதால் அவர் மயங்கியுள்ளார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த ரித்திகா, 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

அதன்பேரில், விரைந்து வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள், மைதிலியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்துவிட்டு ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதுபற்றி அறிந்த ஷியாம் அங்கிருந்து தப்பிவிட்டார். இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் சார்பில், ஜெ.ஜெ.நகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில்,

போலீசார் வந்து மைதிலி உடலை பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து ஷியாமை தேடி வந்த நிலையில், ஜெ.ஜெ நகர் காவல் நிலையத்தில் அவர் சரணடைந்தார்.

அவர் அளித்த வாக்குமூலமாக போலீசார் கூறியதாவது: நான், அண்ணாநகர் பகுதியில் உள்ள ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் படிக்கிறேன். பகுதி நேரமாக வேலை செய்யும் இடத்தில், என்னுடன் வேலை செய்துவரும் ரித்திகாவுடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது.

ரித்திகாவின் அம்மா எங்களது காதலுக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தார். இது சம்பந்தமாக அம்மா, மகள் இடையே சண்டை ஏற்பட்டது. இதுபற்றி ரித்திகா என்னிடம் தெரிவித்தார். இதனால் கோபத்துடன் வந்த நான்,

மைதிலியிடம் வாக்குவாதம் செய்து கழுத்தை பிடித்து நெரித்தபோது இறந்துவிட்டார். இவ்வாறு போலீசார் தெரிவித்துள்ளார். இதையடுத்து ஷியாமை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

எலும்பு நொறுங்கியதால் மூக்கில் ரத்தம் வழிந்தது

திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் விஜயலஷ்மி, ரித்திகாவிடம் நடத்திய விசாரணையில், காதலன் ஷியாம் எனது தாயை தாக்கிய போது, நான் தடுத்தேன்.

அப்போது, என்னை சரமாரியாக தாக்கி தரதரவென்று இழுத்து சென்று அருகில் இருந்த அறைக்குள் வைத்து பூட்டிவிட்டார். இதனால் என்ன நடந்தது என்று எனக்கு தெரியவில்லை.

மேலும், ஷியாம் கராத்தேவில் பிளாக் பொல்ட் வாங்கியவர். சம்பவத்தன்று என் தாயின் கழுத்தை அழுத்தி நெருக்கும்போது கழுத்து எலும்பு நொறுங்கியுள்ளது. இதனால் மூக்கில் இருந்து ரத்தம் வந்ததால் மயங்கி விழுந்துள்ளார்.

மூச்சு பேச்சு இல்லாமல் வெகு நேரம் கிடந்ததால், பயந்து போன ஷியாம் அறைக்குள் பூட்டி இருந்த என்னை அழைத்துவந்து நடந்தவற்றை கூறினார், என தெரிவித்துள்ளார்.