
சேலத்தில் தங்கி ஹோமியோபதி மருத்துவம் இறுதியாண்டு படித்து வந்த மாணவி வர்ஷினி (22), கடந்த மாதம் 6ம் தேதி அவர் தங்கியிருந்த அறையில் சடலமாக மீட்கப்பட்டார்.
இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த அவரது தந்தை வரதராஜனை (51) தனிப்படை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர்.
வர்ஷினி, திருநெல்வேலி வி.கே.புரத்தைச் சேர்ந்த தேக்வாண்டோ மாஸ்டர் சக்திவேல் (42) என்பவரைக் காதலித்து வந்துள்ளார். சக்திவேலுக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இதனால் வர்ஷினியின் தந்தை வரதராஜன் இந்தக் காதலுக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். பலமுறை எச்சரித்தும், வர்ஷினி தனது காதலைக் கைவிட மறுத்துள்ளார். இருவரும் ஏற்காட்டிற்குச் சென்று தங்கியதும் தந்தைக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.
கைது செய்யப்பட்ட வரதராஜன் போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில், “மிகவும் கஷ்டப்பட்டு என் மகளை மருத்துவப் படிப்பிற்குப் படிக்க வைத்தேன். ஆனால் அவர் எங்களை ஏமாற்றிவிட்டு, ஏற்கனவே திருமணமான ஒருவரை விரும்பி வந்தார்.”
அந்த உறவைக் கைவிடும்படி என் மகளின் காலில் விழுந்து கெஞ்சினேன். அப்போதும் அவர் பிடிவாதமாக மறுத்துவிட்டார். ஆத்திரத்தில் மகளை ஓங்கி அடித்தேன். அவர் கீழே விழுந்ததும், துப்பட்டாவால் கழுத்தை நெரித்துக் கொன்று விட்டேன்” என்று வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
கொலையைச் செய்துவிட்டு வரதராஜன் பல்வேறு புனிதத் தலங்களுக்குச் சென்று தலைமறைவாக இருந்துள்ளார்: சென்னை வடபழனி முருகன் கோயிலுக்குச் சென்று சாமியைத் தரிசித்துவிட்டு மொட்டையடித்துள்ளார்.
பின்னர் அங்கிருந்து திருப்பதி மற்றும் திருவண்ணாமலை ஆகிய இடங்களுக்குச் சென்று சுற்றித் திரிந்துள்ளார். மகளைக் கொன்ற மன உளைச்சலில், சேலம் நீதிமன்றத்தில் சரணடைய வந்தபோது போலீசார் அவரைச் சுற்றி வளைத்துக் கைது செய்தனர்.
வர்ஷினி கொலை செய்யப்பட்ட இடத்திற்கு வரதராஜனை அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சேலம் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டார்.
ஒரு தந்தை தனது மகளின் எதிர்காலம் சிதைந்துவிடக் கூடாது என்று நினைத்து, கடைசியில் மகளின் உயிரையே பறித்த இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.















